ரிஷி சுனக் நியமனத்துக்கு இங்கிலாந்து ஊடகங்களின் மாறுபட்ட கருத்துக்கள்

0
48

இங்கிலாந்தின் பிரதமராக இருந்த லிஸ் ட்ரஸ், பதவியை ராஜினமா செய்வதாக கடந்த 20ம் தேதி அறிவித்ததை அடுத்து, ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுவால் ரிஷி சுனக் நேற்று தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, மன்னரிடம் இருந்து வந்த அழைப்பை ஏற்று ரிஷி சுனக் பக்கிங்ஹாம் அரண்மனைக்குச் சென்றார். அப்போது, நாட்டின் அடுத்த பிரதமராக ரிஷி சுனக்கை, மன்னர் மூன்றாம் சார்லஸ் நியமித்தார்.
பிரிட்டனின் பிரதமராக இந்திய வம்சாவளி ரிஷி சுனக் நியமிக்கப்பட்டுள்ளதற்கு இங்கிலாந்து ஊடகங்கள் சில வரவேற்றுள்ளன. சில எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளன. இங்கிலாந்தில் உள்ள அனைத்து முக்கிய செய்தித்தாள்களின் முதல் பக்கத்திலும் ரிஷி குறித்தே செய்திகள் இடம்பெற்றிருந்தன.

தி கார்டியன், “ஒன்றுபடுங்கள் அல்லது இறந்துவிடுங்கள்- டோரி எம்.பி.க்களுக்கு சுனக்கின் எச்சரிக்கை” என்றுதலைப்பு வெளியிட்டது. பிரதமராக அறிவிக்கப்பட்ட பிறகு கன்சர்வேடிவ் மற்றும் யூனியனிஸ்ட் கட்சி எம்பிகளுக்கு ரிஷி விடுத்த எச்சரிக்கை இது. இதை தி கார்டியன் முதல் பக்கத்தில் வெளியிட்டது. மேலும், இந்த செய்தியில், “இரண்டு மாதங்களுக்குள் மூன்றாவது கன்சர்வேடிவ் பிரதம மந்திரி, ஆறு ஆண்டுகளில் ஐந்தாவது பிரதமர்” என்று குறிப்பிட்டதோடு, “அவர் நாட்டை வழிநடத்தும் முதல் இந்துவாகவும் சரித்திரம் படைப்பார்” என்றும் கூறியது.

இதே கருத்தை வெளிப்படுத்தும் வகையில் தி மெயில் தலைப்புச் செய்தி வெளியிட்டது. அதில், “பிரிட்டனுக்கு ஒரு புதிய விடியல்” என்ற தலைப்புடன் “ரிஷி சுனக் ஆசிய பாரம்பரியத்துடன் நாட்டின் இளம் வயது பிரதமராகிறார்” என்று கூறப்பட்டிருந்தது. தி சன் இதழ், “படை உங்களுடன் இருக்கிறது, ரிஷி” என்று கூறியது.

இந்த ஊடங்கள் ரிஷியின் நியமனத்தை வரவேற்றாலும் சில ஊடங்கள் அதை எதிர்த்தன. தி மிரர் தனது தலைப்பு செய்தியில் “எங்களின் புதிய (தேர்வு செய்யப்படாத) பிரதமர். உங்களுக்கு வாக்களித்தது யார்?” என்று குறிப்பிட்டதுடன் “ராஜாவை விட இரண்டு மடங்கு பணக்காரர்” என்றும் விமர்சித்தது.

ஸ்காட்லாந்தின் டெய்லி ரெக்கார்ட் சுனக்கை இன்னும் அதிகமாக விமர்சிக்கும் வகையில் “ஜனநாயகத்தின் மரணம்” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்