லண்டன்: இங்கிலாந்தின் துணைப் பிரதமராக டொமினிக் ராப் நியமிக்கப்பட்டிருக்கிறார். டொமினிக் ராப் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் துணை பிரதமராக இருந்தவர். இந்த நிலையில் இங்கிலாந்தின் பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்றதைத் தொடர்ந்து மீண்டும் துணை பிரதமராக டொமினிக் ராப் நியமிக்கப்பட்டிருக்கிறார். முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸின் அமைச்சரவையில் இருந்தவர்களை ராஜினாமா செய்யுமாறு பிரதமர் ரிஷி சுனக் கேட்டுள்ளார்.
இதற்கிடையே, வணிக செயலாளர் ஜேக்கப் ரீஸ்-மோக், நீதித்துறை செயலாளர் பிராண்டன் லூயிஸ், வேலை மற்றும் ஓய்வூதிய செயலாளர் க்ளோ ஸ்மித், மேம்பாட்டு அமைச்சர் விக்கி போர்ட் ஆகியோர் ராஜினாமா செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அலோக் சர்மா அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இங்கிலாந்தின் நிதியமைச்சராக ஜெர்மி ஹன்ட் தொடர்ந்து இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் அதிரடி மாற்றங்களை ரிஷி சுனக் செய்ய இருப்பதாக இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வளர்ச்சியை உறுதி செய்வேன்: ”மக்களின் நலன், வியாபாரிகளின் நலன்களை கருத்தில் கொண்டே அரசின் செயல்பாடுகள் இருக்கும். நாடு எதிர்கொண்டிருக்கும் சவால்களுக்கு தீர்வு காண்பேன். எனது தலைமையிலான அரசு உங்கள் குழந்தைகள், பேரக்குழந்தைகளின் வளர்ச்சியையும் உறுதி செய்யும்” என்று தனது பிரதமர் உரையில் ரிஷி தெரிவித்திருக்கிறார்.