யால சரணாலயம் சம்பவம்; சபாரி வாகனங்களும் நபர்களும் கறுப்புப் பட்டியலில்

43
  • யால சரணாலயம் சம்பவம் தொடர்பில் 7 சபாரி வழிகாட்டிகள் இடைநிறுத்தம்
  • சரணாலய அதிகாரிகள் தற்காலிக சேவை நீக்கம்

யால சரணாலயம் சம்பவம் தொடர்பான சபாரி வாகனங்களுக்கும் அதனுடன் தொடர்புடையவர்களும் எந்தவொரு சரணாலயத்திற்கும் நுழைய முடியாதவாறு 3 வருடங்களுக்கு கறுப்புப் பட்டியலில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

யால தேசிய சரணாலயத்தில் சபாரி வாகனங்களை விளையாட்டாக செலுத்தி முறையற்ற வகையில் நடந்துகொண்ட சம்பவம் தொடர்பில் 7 சபாரி சுற்றுலா வழிகாட்டிகள் தற்காலிகமாக சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
விவசாயம் மற்றும் வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீரவின் உத்தரவின் அடிப்படையில் இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாக, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திருமதி சந்திரா ஹேரத் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் அதனை கட்டுப்படுத்த தவறிய அதிகாரிகளின் சேவைகளும், விசாரணைகள் நிறைவடையும் வரை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

அதற்கமைய, சம்பவத்துடன் தொடர்புடைய 7 சபாரி வழிகாட்டிகளின் சேவையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதோடு, குறித்த சபாரி வாகனங்களுக்கும் அதனுடன் தொடர்புடையவர்களுக்கும் எதிராக, அவர்களை 3 வருடங்களுக்கு கறுப்புப்பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, அமைச்சின் செயலாளர் சந்திரா ஹேரத் தெரிவித்துள்ளார்.

இது போன்ற ஏதாவது நடந்தால், அதிகாரிகள் தலையிடவோ அல்லது உயர் அதிகாரிகளுக்கு அறிவிக்கவோ முடியும், ஆனால் அவர்கள் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அமைச்சின் செயலாளர் மேலும் கூறினார்.
அத்துடன், யால சரணாலயத்தில் வனவிலங்குகளை துன்புறுத்தும் வகையில் வாகனங்களை செலுத்திய நபர்களை தராதரம் பார்க்காமல் கைது செய்யுமாறு பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் அனுப்புமாறு வனஜீவராசிகள் அமைச்சின் செயலாளருக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை குறித்த நபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த சுற்றுலா நிகழ்வை Spin Riders Club எனும் கழகமொன்றினால் ஒழுங்கு செய்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கழகம், கடந்த மார்ச் மாதம் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவிய வேளையில், மோட்டார்சைக்கிள் பேரணியொன்றை ஏற்பாடு செய்திருந்தமை, பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Group