மியான்மர் | இசைநிகழ்ச்சியில் ராணுவம் தாக்குதல்: கச்சின் இனக்குழுவினர் 60 பேர் பலி

106

பாங்காக்: மியான்மர் நாட்டின் ராணுவம் நடத்திய தாக்குதலில் 60 பேர் பலியாகியுள்ளதாக கச்சின் இனக்குழு தெரிவித்துள்ளது. இச்செய்தியை மீட்புப் பணியாளரும் உறுதி செய்துள்ளார்.

மியான்மரின் வடக்கு மாநிலமான கச்சினில் ஞாயிறு இரவு கொண்டாட்ட நிகழ்வு ஒன்றை கச்சின் இன சிறுபான்மையினரின் முக்கிய அரசியல் அமைப்பான ‘கச்சின் சுதந்திர அமைப்பு’ ஏற்பாடு செய்திருந்தது. விழாவின் ஒருபகுதியாக நடைபெற்றுக்கொண்டிருந்த இசை நிகழ்ச்சியை மக்கள் ரசித்துக்கொண்டிருந்தனர். அப்போது மியான்மர் ராணுவம் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டது.

இதில் பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக இனக் குழு அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் மீட்புப் பணியாளர் திங்கள்கிழமை தெரிவித்தனர். கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஆங் சான் சூகியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடம் இருந்து ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதற்குப் பிறகு நடந்துள்ள மிகப்பெரிய வான்வழித்தாக்குதல் இது. ராணுவத்தினர் நடத்திய ஒரே வான்வழித் தாக்குதலில் அதிக எண்ணிக்கையில் மக்கள் உயிரிழந்த சம்பவம் இது என்றும் கூறப்படுகிறது.

இச்சம்பவத்திற்கு பிறகான வீடியோ காட்சிகளை கச்சின்மக்கள்மீது அனுதாபம் கொண்ட ஊடகங்கள் வெளியிடுகின்றனவே தவிர, அரசாங்கமோ, ராணுவமோ இத்தாக்குதல் சம்பவம் மற்றும் பின்விளைவுகள் பற்றி கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. மியான்மரில் வன்முறை பெருகிவருவது குறித்து விவாதிக்க தென்கிழக்காசிய வெளியுறவு அமைச்சர்கள் இந்தோனேசியாவில் சிறப்புக் கூட்டத்தை நடத்துவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக இந்த தாக்குதல் நடந்துள்ளது.

Join Our WhatsApp Group