பிரிட்டனின் புதிய பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்பு

0
35

பிரிட்டனின் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 42 வயதான ரிஷி சுனக் பதவியேற்றுள்ளார். பக்கிங்ஹம் அரண்மனையில் மன்னர் சார்ளஸை சந்தித்ததையடுத்து, அவர் பிரித்தானியாவின் 57ஆவது பிரதமராக உத்தியோகபூர்வமாக நியமனம் பெற்றுள்ளார்.

லிஸ் டர்ஸ்ஸின் இராஜினாமாவை ஏற்ற மன்னர் சார்ள்ஸ், கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட ரிஷி சுனக்கை அரசாங்கத்தை அமைக்குமாறு அழைக்கப்பட்டார். அவர் இவ்வருடத்தில் பிரித்தானியாவின் பிரதமராக தெரிவாகும் மூன்றாவது நபராவார். இதற்கு முன்னதாக லிஸ் ட்ரஸ் மற்றும் பொரிஸ் ஜோன்சன் ஆகியோர் கடந்த 7 வாரங்களில் பிரதமர் பதவியை வகித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் பிரிட்டனை ஆட்சி செய்யும் வயதில் குறைந்த பிரதமராக ரிஷி சுனக் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.
மன்னர் சார்ள்ஸை சந்தித்த ரிஷி சுனக் பின்னர் பிரதமர் அலுவலகம் உள்ள லண்டன் வெஸ்ட்மின்ஸ்டரிலுள்ள டோவ்னிங் வீதியில் (Downing Street)  பிரதமராக தனது கன்னியை உரையை நிகழ்த்தினார்.

பிரிட்டன் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதாகவும், லிஸ் ட்ரஸ் விட்ட சில தவறுகளை சரிசெய்ய புதிய கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவராக தான் தெரிவு செய்யப்பட்டதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
கட்சியின் நம்பிக்கையை சம்பாதித்துள்ள தான், மக்களாகிய உங்களது நம்பிக்கையையும் சம்பாதிப்பேன் என்று  அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
இதற்கு முன்பாக தனது பிரியாவிடை உரையில் கருத்து வெளியிட்ட லிஸ் ட்ரஸ், வரிக் குறைப்புகள் தொடர்பிலான தனது முயற்சியை பாதுகாத்து, தலைவர்கள் தைரியமாக இருக்க வேண்டுமென குறிப்பிட்டிருந்தார்.

ட்ரஸ் பதவி விலகியதனால் ஏற்பட்ட ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியில் வெற்றி பெற்ற சுனக், கடந்த ஏழு வாரங்களில் இங்கிலாந்தின் மூன்றாவது பிரதமராக தெரிவாகியுள்ளார்.

நேற்றையதினம் (24) இது தொடர்பான தெரிவு கன்சர்வேட்டிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் எடுக்கப்பட்டிருந்தது.
பிரிட்டனின் ஏனைய பிரதான கட்சிகள் முன்கூட்டியே பொதுத் தேர்தலை கோரியிருந்த போதிலும் சுனக் அது தொடர்பான யோசனையை நிராகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்