அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு விழாவில் பளுதூக்கல் போட்டியில் முதலாம் இடம் பெற்று தங்கம் வென்ற மட் புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) மாணவன் செல்வன் யோகநாதன் சதீஸ்காந் அவர்களை பாராட்டி கௌரவிக்கின்ற நிகழ்வு இன்று காலை (25) புதுக்குடியிருப்பில் நடைபெற்றது.
வரலாற்றில் முதல் தடவையாக பளுதூக்கல் போட்டியில் கிழக்கு மாகாணம் தங்கம் வென்றது இதுவே முதல் தடவையாகும். இந்த வெற்றி கிழக்கு மாகாணத்திற்கு குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கிடைத்த பாரிய வெற்றியாகும். பாடசாலை அதிபர் அ.கு லேந்திரராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வலயக்கல்வி பணிப்பாளர் பிரதம அதிதியாகவும் கோட்டக்கல்விப் பணிப்பாளர் புதுக்குடியிருப்பு ஆலயபரிபாலன சபையின் நிருவாக உறுப்பினர்கள் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் ஊர் பெரியார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
காலை 7.30 மணிக்கு அருள்மிகு விக்கினேஸ்வரர் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகிய வரவேற்பு நிகழ்வு மாணவர்களின் பாண்ட் வாத்தியங்கள் முளங்க நடை பவனியாக கண்ணகி மகா வித்தியாலயத்தின் ஒன்றுகூடல் மண்டபம் வரை சென்று அங்கு பாராட்டு விழா நடைபெற்றது.
புதுக்குடியிருப்பு ஆலய பரிபாலன சபையின் பணபரிசுடனான அமோக வரவேற்பும் ஆசியும் வெற்றியீட்டிய மாணவனுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. குறித்த மாணவனின் வெற்றிக்கு அயராது பாடுபட்ட அனைத்து உள்ளங்களுக்கும் குறிப்பாக பாடசாலையின் வளர்ச்சிக்கு அயராது ஊக்கமளித்துவரும் வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா அம்மணிக்கு விசேடமாக அதிபரினால் நன்றி கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.