இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக ஸ்தாபகர் “அஸ்ரப்” தின நிகழ்வு

91

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இருபத்தியாறாவது வருட நிறைவினைக் குறிக்கும் தென்கிழக்குப் பல்கலைக்கழக ஸ்தாபகர் தின நிகழ்வு இன்று (25) செவ்வாய்க் கிழமை பல்கலைக்கழக பிரதான கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. வருடாந்தம் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக ஸ்தாபகர் ஜனாதிபதி சட்டத்தரணி முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களை நினைவுகூரும் முகமாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஏ. றமீஸ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். தொடக்க நிகழ்வுகள் பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறை மற்றும் ஒலுவில் வளாகங்களில் இடம்பெற்ற மர நடுகையுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

உத்தியோகபூர்வ நிகழ்வுகள் யாவும் பல்கலைக்கழகத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் இடம்பெற்றன. நிகழ்வின் வரவேற்புரையினை ஆங்கில மொழி விரிவுரையாளர் எம்.ஏ.எம். சமீம் மேற்கொண்டார். நிகழ்வின் பிரதான உரையாகிய “கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரஃப் நினைவுப் பேருரையினை” தென்கிழக்குப் பல்கலைக்கழக சந்தைப்படுத்தல் முகாமைத்துவத் துறை தலைவரும் பேராசியருமான எம்.பீ.எம். இஸ்மாயில் நிகழ்த்தினார். நிகழ்வின் பிரதம அதிதி உரையினை பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஏ. றமீஸ் நிகழ்த்தியதுடன் வருடத்தின் சிறந்த ஆய்வாளர்களுக்கான உபவேந்தர் விருதுகளும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நீண்டகாலம் சேவையாற்றியவர்களுக்கான விருதுகளும் உபவேந்தரினால் வழங்கிவைக்கப்பட்டது.

உபவேந்தர் தனது உரையில் இப்பிராந்தியத்தின் நீண்டகாலத் தேவையாக உள்ள மருத்துவ பீடம் அமைப்பது பற்றிக் குறிப்பிட்டதுடன் குறித்த பீடத்தினை ஒலுவில் வளாகத்தில் அமைப்பதற்கான திட்டங்கள் வகுப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். பட்டதாரி மாணவர்களுக்கு சிறந்த தொழிற் தகைமையினை உருவாக்கும் நோக்கில் கணிணிப் பீடம் ஒன்றினை நிறுவுவதற்கும் பட்டப் பின்படிப்புக் கற்கையினை வினைத்திறனாகக் கொண்டுசெல்வதற்கு ஏதுவாக பட்டப்பின்படிப்புக் கற்கைகள் பீடம் ஒன்றினைத் தாபிப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகக் குறிப்பிட்டார்.

முன்னெப்போதும் இல்லாதளவிற்கு கடந்த ஒரு வருட காலத்தினுள் பல்கலைக்கழகத்தினை சமூகத்துடன் ஒன்றிணைப்பதில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் வெற்றி கண்டுள்ளது. பிராந்தியத்திலுள்ள விவசாய, பீன்படி சமூகங்களுடன் இணைந்த பல திட்டங்களை பல்கலைக்கழகம் முன்னெடுத்துவருகின்றது. கல்வி மற்றும் ஆய்வுப் பரப்பில் இப்பல்கலைக்கழகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கண்டுள்ளதுடன் வெளிநாடுகளில் உள்ள பல பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பல பயனுள்ள கல்வி மற்றும் ஆய்வுசார் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான தகுந்த திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளதாக உபவேந்தர் தனது உரையில் குறிப்பிட்டார்.

நிகழ்வின் மற்றுமொரு அங்கமாக தென்கிழக்குப் பிராந்திய நூலக மற்றும் தவகவல் வலையமைப்பு (SERLIN) தொலைநோக்கும் திட்டமும் உபவேந்தரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத்திட்டம் தொடர்பான அங்குரார்ப்பண உரையினை பல்கலைக்கழக நூலகர் எம்.எம். ரிபாயுத்தீன் ஆற்றினார். நிகழ்வின் இறுதி அம்சமாக பல்கலைக்கழகப் பதிவாளர் எச். அப்துல் சத்தார் அவர்கள் வழங்கிய நன்றியுரையுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுற்றன.

இந்நிகழ்வில் பேரவை உறுப்பினர்கள், பீடாதிபதிகள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், பதில் நிதியாளர், பிரதிப் பதிவாளர்கள், சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட விரிவுரையாளர்கள், சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட பதிவாளர்கள், சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட நிதியாளர்கள், பல்கலைக்கழக ஊழியர் சங்களின் பிரதானிகள், பிரதேச கல்வியலாளர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள், பல்கலைக்கழகப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Join Our WhatsApp Group