போட்டியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகல்: பிரிட்டன் பிரதமர் ஆக ரிஷி சுனக்குக்கு வாய்ப்பு

34

லண்டன்: பிரிட்டன் பிரதமருக்கான போட்டியில் இருந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் விலகி இருக்கிறார். இதனால், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டனின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இங்கிலாந்தில் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. நாட்டில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல், கடந்த செப்டம்பர் மாதம் பிரதமராக பதவி ஏற்ற லிஸ் ட்ரஸ் கடந்த 20-ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய பிரதமர் பதவிக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது.

இதில் இங்கிலாந்து முன்னாள் நிதியமைச்சரும் இந்திய வம்சா வளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் இடையே நேரடி போட்டி நிலவி வந்தது. ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியில் 357 எம்.பி.க்கள் உள்ளனர். அவர்களில் 100 எம்.பி.க்கள் ஆதரவுபெற்ற வேட்பாளரே பிரதமர் பதவிக்கான போட்டியில் பங்கேற்க முடியும். ரிஷி சுனக்குக்கு இதுவரை 137 எம்.பி.க்கள் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளனர். முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு 59 எம்.பி.க்கள் ஆதரவு அளித்திருந்தனர்.
பிரதமர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (அக்.24) கடைசி நாளாகும். இன்று மாலையே எம்.பி.க்கள் வாக்களிக்க உள்ளனர். எம்.பி.க்கள் அளவிலேயே புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட இருந்தது. எனினும் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு 28-ம் தேதி முடிவு அறிவிக்கப்பட இருந்தது.

இந்த நிலையில், பிரதமர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக போரீஸ் ஜான்சன் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளார். “பிரதமர் தேர்தலில் போட்டியிடுவதற்கு எனக்கு 102 எம்பிகளின் ஆதரவு இருக்கிறது என்றாலும், நாட்டின் நலனிற்காக ரிஷி சுனக், மற்றொரு வேட்பாளரான பென்னி மார்டென்ட் ஆகியோர் ஒன்றிணைந்து வர வேண்டும் என்று வலியுறுத்த தவறி விட்டேன். எனக்கு போதிய ஆதரவு இருக்கிறது என்று நான் நம்புகிறேன் என்றாலும், இது சரியான தருணம் இல்லை என்று நான் கருதுகிறேன்” என்று போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை வரையில் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனால் 60 எம்பிகளின் ஆதரவினை மட்டுமே பெற முடிந்தது.

Join Our WhatsApp Group