பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்? – போட்டியில் முந்தும் போரிஸ் ஜான்சன், ரிஷி சுனக்

0
67

லண்டன்: பிரிட்டனின் அடுத்த பிரதமர் போட்டியில் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் ஆகியோர் முன்னணியில் இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இடையே பிரிட்டன் பிரதமராக லிஸ் ட்ரஸ் பொறுப்பேற்றார். அவரது தலைமையிலான அரசு வரி குறைப்பு திட்டங்களில் மேற்கொண்ட குளறுபடியான நடவடிக்கைகளையடுத்து பிரிட்டன் பொருளாதாரம் மேலும் நெருக்கடிக்கு உள்ளானது. இதனால், டாலருக்கு நிகரான பவுண்ட் மதிப்பு கணிசமாக வீழ்ச்சியடைந்தது.

ஏற்கெனவே அன்றாட பொருட்களின் செலவினம் அதிகரித்து வருவதால் அவதிக்குள்ளான பிரிட்டன் மக்களுக்கு பவுண்ட் மதிப்பில் ஏற்பட்ட சரிவு கவலையை மேலும் அதிகரிக்கச் செய்தது. இந்த நிலையில், அரசின் குளறுபடியான அறிவிப்புகளுக்கு பொறுப்பேற்று பிரிட்டன் நிதி அமைச்சர் ராஜினாமா செய்தார். தொடர்ந்து, பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸும் தனது பதவியை வியாழக்கிழமை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் பிரிட்டனின் அடுத்த பிரதமர் போட்டியில் முன்னாஸ் பிரதமர் போரிஸ் ஜான்சன், முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் ஆகியோர் முந்துவதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னர் நடந்த கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் தேர்தலில் இறுதிவரை முன்னேறி லிஸ் ட்ரஸ்ஸிடம் தோல்வியடைந்த ரிஷி சுனக்குக்கு 100 எம்பிக்களின் ஆதரவு பலமாக இருப்பதால் அடுத்த பிரதமர் ஆகும் வாய்ப்பு ரிஷிக்குத்தான் உள்ளதாக கருத்து கணிப்புகளும் தெரிவிக்கின்றனர். அதேவேளையில் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து கன்சர்வேடிவ் கட்சி எம்.பி. பால் பிரிஸ்டோ , “ இந்த வாய்ப்பை தன் பக்கம் போரிஸ் திருப்புவார் என்று நம்புகிறேன். இதனை கன்சர்வேடிவ் கட்சியின் எம்.பி.,கள் உணர்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். போரிஸ் அடுத்த பொது தேர்தலிலும் வெற்றி பெற முடியும்” என்றார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்