நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் கூறிய தலைவர்கள்

0
41

ஜனாதிபதி, ரணில் விக்ரமசிங்க- நாட்டை கட்டி எழுப்ப தீபத்திருநாளில் சகலரும் ஒன்றுபடுவோம்- ஜனாதிபதி தீபாவளி வாழ்த்து வண்ண மயமான கலாசார நிகழ்வான தீபாவளி நன்னாளில் வாழ்த்து தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். அஞ்ஞானம் நீங்கி, மெய்ஞானம் பிறக்க வேண்டும் என்பதற்காக இந்துக்கள் இந்நன்னாளில் தங்களின் இல்லங்கள், கோயில்கள் என அனைத்து இடங்களிலும் தீபம் ஏற்றி, தீபத்திருநாளைக் கொண்டாடுகின்றனர். ஒளியால் மட்டுமே இருளை நீக்க முடியும். அதேபோல நம் தாய் நாட்டை முன்னொருபோதும் இல்லாத விதத்தில் சூழ்ந்திருக்கும் இருளை விரட்டி, ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து செயற்பட வேண்டும். சுபீட்சமான ஒரு நாட்டிற்கு சமாதானம், ஒற்றுமை, சகோதரத்துவம் என்பன மிகவும் முக்கியமானவை. இனம், மதம், கட்சி, நிறம் என்ற பிரிவினையின்றி, நம்வாழ்விலும், நாட்டிலும் சூழ்ந்திருக்கும் இருளை நீக்க வேண்டும். இதனைக் குறிக்கோளாகக் கொண்டு, நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். இதற்கு அனைவரும் கைகோர்த்துக் கொள்ள வேண்டும் என்று இத்தீபத் திருநாளில் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன். இம்முறை தீபாவளிப் பண்டிகையானது அனைவரது அபிலாசைகளையும் பூர்த்தி செய்து, இலங்கையை சௌபாக்கியம் நிறைந்த நாடாக உருவாக்கும் சிறந்த எதிர்காலத்தின் தொடக்கமாக அமைய வேண்டுமென பிரார்த்திக்கிறேன். தீபத்திருநாளைக் கொண்டாடும் உங்கள் அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள். ரணில் விக்ரமசிங்க.

பிரதமர், தினேஷ் குணவர்தன- தீமையை எதிர்ப்போம்; நன்மையை விதைப்போம்- பிரதமர் தினேஷ் வாழ்த்து தீமை என்னும் இருளை அகற்றி நன்மை என்னும் ஒளியை சமூகத்தில் பரப்புவதை மையப் பொருளாகக் கொண்டு, உலகம் முழுவதும் வாழ் இந்துக்கள் தீபங்களை ஏற்றி, எங்கும் ஒளி பரப்பி, தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.பிரிவினைக்கு ஆயிரம் காரணங்களை உருவாக்கினாலும், கட்சி, நிற, மத, இன பேதங்களை ஒதுக்கி, பொது அக்கறையுடன் செயற்பட வேண்டிய காலகட்டத்தை இன்று நாம் அடைந்துள்ளோம். தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் இத்தருணத்தில், தீபாவளியின் உண்மையான அர்த்தத்தை மனதில் இருத்தி, பொது நலனுக்காக ஒன்றிணைந்து செயல்பட்டு, இந்த சவாலான நேரத்தை எதிர்கொள்ள உறுதி எடுத்தல் வேண்டும். “ஆன்மீக இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றி, தீமையை அழித்து நன்மை, அறியாமையிலிருந்து அறிவொளி” என்பனவற்றைக் குறிக்கும் தீபாவளிப் பண்டிகையை அர்த்தமுள்ளதாக்கி, தனிமனித வெற்றியை விட பொதுவான ஆன்மீக முன்னேற்றத்தின் வெற்றியில் நாம் அனைவரும் ஒன்றிணைவோம்.தினேஷ் குணவர்தன, பிரதமர், இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு.

எதிர்க்கட்சித் தலைவர், சஜித்– ஒளிமயமான நாட்டுக்காக தீபாவளியில் பிரார்த்திப்போம் – சஜித்

“வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும்” பண்டிகையாக தீபாவளிப் பண்டிகை உலக வாழ் இந்துக்களால் கொண்டாடப்படுகிறது.

இந்துக்கள் இத்தினத்தில் எண்ணெய் வைத்து, நீராடி, புத்தாடை அணிந்து, ஆலய தரிசனம் செய்வதுடன், ஆலயங்கள் மற்றும் வீடுகளில் தீபங்கள் ஏற்றி வழிபடுவார்கள். அத்துடன் பெரியோர்களை வணங்கி,பரிசுப் பொருட்கள் பரிமாறி, பட்டாசு கொளுத்தி, உறவினர்களுடன் இனிப்பான சிற்றுண்டிகள் உண்டு, உலகெங்கும் உள்ள இந்துக்கள் தீபாவளிப் பண்டிகையைக் வெகு சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.

தீமையை தோற்கடித்து நன்மை கிடைத்த நன்னாளான இன்றைய தீபாவளி தினத்தில், நாட்டில் தற்போதுள்ள ஆபத்தான சூழ்நிலைமையை தோற்கடித்து நாட்டை கட்டியெழுப்ப நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.

தீபாவளிப் பண்டிகையை உலகிற்கு இருளை அகற்றி வெளிச்சம் தரும் பண்டிகையாகவும், அறியாமையை நீக்கி ஞானத்தை அளிக்கும் பண்டிகையாகவும் இந்து மக்கள் கொண்டாடுகின்றனர்.

புராதன இதிகாசங்களில் குறிப்பிடப்பட்ட சமூக நல்லிணக்கம்,குடும்ப உறவுகளின் முக்கியத்துவம் மற்றும் புரிந்துணர்வு ஆகியவன்றின் ஒருமித்த நாளாக தீபாவளி தினம் கொண்டாடப்படுகிறது.மேலும் இலங்கை மக்களிடையே நல்லிணக்கத்தையும், பரஸ்பர புரிந்துணர்வையும் உருவாக்க இந்த அற்புதமான நன்னாள் பெரும் பங்களிப்பை வழங்குகிறது.

அனைவரினதும் வெறுப்பும் கோபமும் நீங்கி, மனித நல்லிணக்கம் நிறைந்த இலங்கையில் சுதந்திரமாகவும், நல்லிணக்கத்துடனும், சமாதானத்துடனும் வாழ தீபத்திருநாள் அனைவருக்கும் உறுதுணையாக அமையட்டும்.

அமைச்சர், டக்ளஸ் தேவானந்தா- மீண்டெழும் நம்பிக்கையுடன் தீபாவளியை கொண்டாடுங்கள் – அமைச்சர் டக்ளஸ் வாழ்த்து.

பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துள்ள சூழலிலும் மீண்டெழும் நம்பிக்கையுடன் தீபாவளித் திருநாளை கொண்டாடும் அனைவருக்கும் அன்பு கலந்த வாழ்த்துக்கள் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது, “வளர்ந்து வரும் சிறிய நாடாகிய எமது தாய் நாட்டின் பொருளாதார பின்னடைவு, பெரும் முடக்கத்தை ஏற்படுத்திய கொரோனா தொற்று மற்றும் உலக நாடுகளுக்கு இடையேயான மோதல்களால் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிகள் சூழ்ந்துள்ள தற்போதைய நிலையில் எமது நாட்டையும் மக்களையும் மீட்டெடுக்க காத்திரமான நடவடிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

அந்த வகையில் நாமும் எமது வாழ்விடங்களில் உள்ள நிலங்களை பயிர்ச் செய்கை மற்றும் நீர்வேளாண்மைக்கும், ஏனைய வளங்களை பொருளாதார தேடலுக்கான வாய்ப்பாகவும் பயன்படுத்தி சுய பொருளாதாரத்தில் எமது மக்களை தலை நிமிரச் செய்யும் முயற்களை அயராது முன்னெடுத்து வருகின்றேன்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியாலும், சுயநலன் சார்ந்த தரப்புக்களின் தூண்டுதல்களுக்கு விலைபோனவர்களினாலும் எனது அயராத முயற்சிகளுக்கு எதிரான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

மக்கள் எதிர்கொள்ளும் அவலங்கள் தொடர வேண்டும் என்றும் மக்கள் நலப் பணிகள் எவ்வகையிலேனும் தடுத்து நிறுத்தப்பட்டுவிட வேண்டும் என்றும் தீய எண்ணங் கொண்ட அசூரர்களை காலம் கணக்கு தீர்க்கும் என்பதே தீபாவளிப் பண்டிகை எடுத்தியம்பும் வரலாற்று பாடமாகும்.

நரகாசூரன் அழிக்கப்பட்ட தீபத்திருநாளைக் கொண்டாடும் உங்களின் நம்பிக்கையை பாதுகாக்க நாம் அர்ப்பணிப்புடன் பாடுபடுவோம் என்ற மகிழ்ச்சியில் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்” என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்‌ஷ,முன்னாள் ஜனாதிபதி- தீப ஒளி சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வை புதுப்பிக்கட்டும்- முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி என்ற அவலநிலை நீங்கி, ஒளி நிறைந்த வளர்ச்சிப் பாதை நோக்கி, பல தடைகளைத் தாண்டி நாம் பயணித்துக்கொண்டிருக்கிறோம். அனைத்துத் துறைகளிலும் நம் தேசம் முன்னேற்றம் காண வேண்டும் என்பதே எம் அனைவரினதும் பெருவிருப்பு. இன்று உலகையே அச்சுறுத்திவரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மக்களைப் பாதுகாக்கும் பணியோடு, பல முன்னேற்றகரமானதும் ஆக்கபூர்வமானதுமான செயற்பாடுகளையும் நாம் முன்னெடுத்து வருகிறோம். அனைவரதும் அபிலாசைகள் நிறைவேறி, இலங்கைத் திருநாடு சுபீட்சம் மிக்கதொரு தேசமாக மலரும் என்ற நம்பிக்கை ஒளிக்கீற்றின் ஆரம்ப நாளாக இத்தீபாவளித் திருநாள் அமையட்டும்.இருட்டு வழிக்கு ஒளி இருந்தால் அதுவே நாம் செல்லும் வழிக்குத் துணையாக அமையும். மனித வாழ்க்கைப் பாதைக்கு இறை ஆசி என்னும் அருட்தீபம் துணை நின்றால் வாழ்வு சுபீட்சமாகும். அத்தகைய அருட் தீபமாகிய ஆன்மீக ஞான ஒளியை இறைவழிபாடு மூலம் பெறும் சிறப்பு வாய்ந்த நன்னாளே தீபாவளித் திருநாள். இந்துக்கள் அனைவராலும் பக்தியோடும் சிறப்போடும் கொண்டாடப்படும் இந்தத் தீபாவளித் திருநாளில் உங்களை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.தேசிய ஒற்றுமையைப் போற்ற இது ஒரு சிறந்த நாளாகும். எல்லா மதங்களிலும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யப்படுவதென்பது, எம்முள் இருக்கும் அறியாமை என்னும் இருள் அகன்று அகவொளி பிரகாசிக்க வேண்டும் என்பதற்கான குறியீடே. இந்நன்னாளில் ஏற்றப்படும் தீப ஒளியும் சமூகங்களுக்கு மத்தியில் சிறந்த புரிந்துணர்வுக்கான சமிக்ஞையாகவே எண்ணப்பட வேண்டும். மிக நீண்டகாலமாக எமது மக்களைப் பிரித்துவைத்திருந்த எல்லா வேறுபாடுகளையும் களைவதற்குரிய தருணமாக இத் தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவோம். இந்த ஒளியை நாம் அணைய விடாமல் பாதுகாத்து மறுபடியும் இருளுக்குள் மூழ்காமல் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என இலங்கை மாதாவின் பிள்ளைகளை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.இலங்கைவாழ் இந்து மக்கள் அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துகள்! மஹிந்த ராஜபக்‌ஷமுன்னாள் ஜனாதிபதி

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்