- சாரதி உள்ளிட்ட 4 பேர் வைத்தியசாலையில் அனுமதி
இராணுவ டிபென்டர் வாகனமொன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இராணுவ கெப்டன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (22) அதிகாலை பொலன்னறுவை, வெலிக்கந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிங்கபுர – வெலிக்கந்த வீதியில் சிங்கபுரவிலிருந்து வெலிக்கந்த நோக்கி பயணித்த குறித்த டிபென்டர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின்போது டிபென்டரின் முன் இருக்கையில் பயணித்த இராணுவ கெப்டன் ஒருவர் காயமடைந்து வெலிக்கந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
அதில் பயணித்த சாரதி உள்ளிட்ட 4 அதிகாரிகள் காயமடைந்து பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாத்தளை, மாதிபொல வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். சடலம் வெலிக்கந்த வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ கடமைக்காக, திருகோணமலையில் இருந்து மாதுரு ஓயா இராணுவ முகாமிற்கு செல்லும் வழியில் குறித்த வீதியில் பயணித்த நிலையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வெலிக்கந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.