** மக்கள் எதிர் பார்க்கும் எந்த அடிப்படை மாற்றமும் இல்லை
** 22 ஆவது திருத்தம் அரசியலமைப்பின் அடிப்படையில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை
** மக்கள் போராட்டம் மீண்டும் வெடிக்கும் எனவும் எச்சரிக்கை
அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தச் சட்டம் மூலம் மக்களை முழுமையாக ஏமாற்றும் சட்டம் மூலம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம் ஏ சுமந்திரன் சபையில் சற்று முன் தெரிவித்தார்.
அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தச் சட்டம் மூலம் சற்று நேரத்துக்கு முன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அமைச்சர் விஜயதாச ராஜபக்சே இதனை சபையில் சமர்ப்பித்து உரையாற்றிய பின், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் உரையாற்றிய எம்.ஏ. சுமந்திரன், இது இந்த நாட்டு மக்களை அடிப்படையில் இருந்து ஏமாற்றுகின்ற ஒரு சட்டமூலம் என கூறினார்.
நாட்டில் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக கொண்டு வரப்படுவதாக சொல்லப்படும் இந்த சட்டம் மூலம், எந்த ஒரு அடிப்படை மாற்றத்தையும் செய்யவில்லை என்று கூறினார். மக்கள் வேண்டி நிற்பது ‘system change’. இந்த 22 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் மக்கள் எதிர்பார்க்கும் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. இது மீண்டும் நாட்டிலே பாரிய போராட்டம் வெடிப்பதற்கு வழிவகுக்கும் என இந்த பாராளுமன்றத்தை எச்சரிப்பதாக அவர் கூறினார்.
அரசியலமைப்பின் அடிப்படையில் மாற்றம் இல்லாமல், நாட்டில் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என்று நினைப்பது தவறானதாகும். இந்த சட்டமூலம் மக்களை முழுமையாக ஏமாற்றியுள்ளது. மக்களுக்கு பொய் சொல்லி இப்படி ஒரு சட்டத்தை கொண்டு வருவது நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இவ்வாறான சட்டமூலங்கள் திருத்தங்களை கொண்டு வருவதாக இருந்தால், பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு முன் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இதுதான் ஜனநாயக வழியாக இருக்கும் என சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படும் என்று மக்களுக்கு உறுதி அளிக்கப்பட்டது. ஆனாலும், இந்த திருத்தச் சட்ட மூலமும் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கு வழி வகுக்க வில்லை.
நிறைவேற்று அதிகாரத்தை 6 மாதங்களில் உழைப்போம் என்று பலர் ஆட்சிக்கு வந்தார்கள். 10 வருடங்கள் தாண்டியும் எதுவும் நடக்கவில்லை. “ஆகவே மக்களுக்கு பொய் சொல்ல வேண்டாம். மக்களை ஏமாற்றி இந்த சட்டம் மூலம் நிறைவேற்ற படுமாக இருந்தால், மீண்டும் நாட்டில் மக்கள் போராட்டம் வெடிக்கும் என்பதை மறந்து விடாதீர்கள் ” என சுமந்திரன் எச்சரிக்கை விடுத்தார்.