விசேட தேவையுடைய சிறுவர்களுக்கென தேசிய கொள்கை: தயாரிப்பது தொடர்பில் கவனம்

65
  • சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் கலந்துரையாடல்

இலங்கையில் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான தேசிய கொள்கையொன்றைத் தயாரிப்பதன் அவசியம் குறித்து சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் கவனம் செலுத்தியுள்ளது.
இந்நாட்டிலுள்ள சிறுவர்களின் நல்வாழ்வு தொடர்பில் ஒன்றியம் எடுக்கக்கூடிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராயும்போதே இவ்விடயம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இதற்கமைய சிறுவர்களுக்கான பாதுகாப்புத் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, பெண்கள், சிறுவர்கள் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு மற்றும் அதனுடன் தொடர்புபட்ட வேறு நிறுவனங்கள், பொலிஸ் மற்றும் பெண்கள் பிரிவு, யுனிசெப் போன்ற நிறுவனங்களுடன் சிறுவர்களின் பாதுகாப்புத் தொடர்பிலான பிரச்சினைகள் குறித்தும், அவற்றை நிவர்த்தி செய்வதற்கான யோசனைகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாட இங்கு தீர்மானிக்கப்பட்டது.

சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி குமாரி விஜயரத்ன தலைமையில் செவ்வாய்க்கிழமை (18) கூடியபோதே இவ்விடயம் கலந்துரையாடப்பட்டது.

இந்நாட்டிலுள்ள சிறுவர்கள் மற்றும் அவர்களுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு துறைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதுடன், ஒட்டுமொத்த சிறுவர்களுக்கும் தரமான கல்வியைப் பெற்றுக் கொடுத்தல், உரிய சுகாதாரப் பாதுகாப்பைப் பெற்றுக் கொடுத்தல், தற்பொழுது காணப்படும் வளங்கள் மற்றும் அதிகாரிகளின் திறன்களை அதிகரித்தல், சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதற்கு முன்னர் அவை தொடர்பான சூழல்களை அடையாளம் காணுதல் மற்றும் உரிய முன் நடவடிக்கைகளை எடுத்தல், உரிய போசாக்கைப் பெற்றுக் கொள்வதற்கான அணுகலை அதிகரித்தல், சிறுவர்களின் திறன்களை அதிகரிப்பதற்குத் தேவையான சூழலை உருவாக்குதல் போன்ற விடயங்களும் இங்கு கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

அத்துடன், கிராமிய, நகர மற்றும் தோட்டப்புறங்களில் உள்ள சிறுவர்களுக்குக் காணப்படும் பல்வேறு சிரமங்களைத் தனித் தனியாகத் தீர்ப்பதற்கான வழிகள் குறித்தும் கவனம் செலுத்த தீர்மானிக்கப்பட்டது.

புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாகாண ஆணையாளர்களின் யோசனைகள் மற்றும் ஆலோசனைகளுக்கு முன்னுரிமை கொடுத்து சிறுவர் தொடர்பான அரச அதிகாரிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட ஒன்றியத்தின் உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்தமையும் விசேட அம்சமாகும்.

சிறுவர்களின் பிரச்சினைக்குரிய சூழ்நிலைகளில் ஊடகங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் தமது அதிருப்தியை வெளிப்படுத்திய ஒன்றியத்தின்  உறுப்பினர்கள், உரிய அமைச்சருடன் இணைந்து முறையான வேலைத்திட்டம் மற்றும் கொள்கையை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்தினர். மேலும், சிறுவர்களின் ஊட்டச்சத்து குறைபாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் ஒன்றியத்தின் இணை உப தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வேலு குமார், பாராளுமன்ற உறுப்பினர்களான தலதா அத்துகோரள, (வைத்தியகலாநிதி) சுதர்ஷினி பெனாண்டோபுள்ளே, சுஜித் சஞ்சய் பெரேரா, வீரசுமன வீரசிங்க, டயானா கமகே, மஞ்சுளா திஸநாயாகக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

Join Our WhatsApp Group