தீபாவளி முற்பணம் தருவதாக ஏமாற்றிய தோட்ட கம்பெனிகள் : தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

11

(க.கிஷாந்தன்)
 
தீபாவளி முற்பணம் ரூபா 15,000 ஆயிரம் தருவதாக பெருந்தோட்ட கம்பனிகள் அறிவித்திருந்த போதிலும் அக்கரப்பத்தனை பெருந்தோட்ட கம்பனிக்கு உட்பட்ட அக்கரப்பத்தனை வேவர்லி, மோனிங்டன், போட்மோர், ஆடலி உள்ளிட்ட தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு 5000 ரூபாய் அல்லது பத்தாயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் முற்பணம் தருவதாக இன்று அறிவித்ததை அடுத்து இத்தோட்டத்தை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு முன்பாக கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
சுமார் இரண்டு மணி நேரம் போராட்டத்தில் ஈடுப்பட்டதோடு, மீண்டும் தொழிலுக்கு செல்லாமல் தொழிலாளர்கள் வீடுகளுக்கு திரும்பினர்.
 
இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
 
தாம் முறையாக வேலை செய்ததாகவும், தற்போது எமக்கு வழங்கப்படும் முற்பணம் மாத சம்பளத்தில் அளவிடப்படும். அதேவேளை பெருந்தோட்ட கம்பனி 15 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறியிருந்த போதிலும் இதனை தோட்ட நிர்வாகம் வழங்க முடியாது என கூறுவது எவ்விதத்தில் ஏற்றுக்கொள்ள முடியும்.
 
இதனாலேயே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்டதாக போராட்டகாரர்கள் தெரிவித்தனர்.
 
விலைவாசி அதிகரிப்பு பொருளாதார பிரச்சனைகள் இருக்கும் போது எவ்வாறு தீபாவளியை கொண்டாட முடியும். எனவே தோட்ட நிர்வாகம் உடனடியாக தீபாவளி முற்பணத்தை முறையாக வழங்க வேண்டும். இல்லாவிட்டால் தாம் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கப்போம் என தொழிலாளர்கள் நிர்வாகத்திற்கு எச்சரித்துள்ளனர்.

Join Our WhatsApp Group