எரிபொருள் விலை குறைப்பின் பலனை அனுபவிக்கும் குட்டி முதலாளிகள்

0
80

** கட்டுப்படுத்தும் அதிகாரத்தை : கையில் எடுக்குமா அரசு…?

பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகள் திடீரென குறைக்கப்பட்டன. 92 ரக பெட்ரோலின் விலை 40 ரூபாயினாலும், சூப்பர் டீசலின் விலை 15 ரூபாவினாலும் குறைக்கப்பட்டன.

விலை சூத்திரத்துக்கு அமைய பெட்ரோல், டீசலின் விலைகள் மூன்று தடவைகள் குறைக்கப்பட்டு இருக்கின்றன. என்றாலும், பஸ் கட்டணங்களும் முச்சக்கர வண்டிகளின் கட்டணங்களும் குறைக்கப்பட்டதாக இல்லை. “எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும் கட்டணங்களை தங்களால் குறைக்க முடியாது” என்று எடுத்த எடுப்பிலேயே மறுத்து விடுகின்றனர்.

ஒரு லீட்டர் பெட்ரோலுக்கு 460 ரூபாய் செலுத்தியவர்கள், இப்போது 375 ரூபாவுக்கு பெறுகின்றனர். கட்டணங்களை குறைக்க முடியாதென்று அழுத்தமாக கூறி நிராகரிக்கின்றனர் முச்சக்கர வண்டி சாரதிகள், அதற்காக ஏதோ எல்லாம் காரணமாக கூறுகின்றார்கள்.

இதேபோல, சுப்பர் டீசலின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டிருக்கின்ற பொழுதும், தனியார் பஸ் உரிமையாளர்களும் இந்த விலை குறைப்பால் கட்டணங்களை குறைப்பதற்கான வரையறைக்குள் இன்னும் வரவில்லை. இதனால், தாங்களும் கட்டணங்களை குறைக்க முடியாது என்று தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்தின கூறுகிறார்.

நாள் கணக்கில் வரிசைகளில் நின்று, காத்திருந்து எரிபொருள் பெற்று, அந்த சுமை அவ்வளவையும் பொதுமக்கள் மீது திணித்த முச்சக்கர வண்டி சாரதிகளும் தனியார் பஸ் காரர்களும் 100 ரூபாவுக்கு மேல் எரிபொருள் விலை குறைக்கப்பட்டு வரிசைகளும் இல்லாமல் ஆக்கப்பட்ட நிலையில், கட்டணங்களை குறைக்க முடியாது என்று அடம் பிடிப்பது, மக்களை பழிவாங்கும் நடவடிக்கையாகவே பார்க்க முடிகின்றது.

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற பொருளாதாரம் நெருக்கடி நிலையையும் அதனால் ஏற்பட்டிருக்கின்ற அரச பலவீனத்தையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முச்சக்கர வண்டி சாரதிகளும் தனியார் பஸ் உரிமையாளர்களும் முயல்கிறார்கள் என்பது தெட்டத் தெளிவாகின்றது. சலுகைகளையும் வசதிகளையும் பெறுவதற்காக அரசாங்கத்தையும் அரசாங்க அதிகாரிகளையும் நாடுகின்ற முச்சக்கர வண்டி சாரதிகளும் தனியார் பஸ்காரர்களும், கட்டண குறைப்பு என்று வருகின்ற பொழுது, வீராம்பு தனத்துடன் வரிந்து கட்டிக்கொண்டு செயல்படுவதை காண முடிகின்றது.

எரிபொருள் விலை குறைந்தாலும் வாகன உதிரி பாகங்களின் செலவு அதிகரித்திருக்கிறது என்று இவர்கள் சுட்டிக் காட்டுகின்றார்கள். இது மக்களை மடையர்களாக்கி பேய்க் காட்டும் கதையாகவே இதனை பார்க்க முடிகின்றது.
எரிபொருள் விலை அதிகரிப்பு ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தலாம். வாகன உதிரி பாகங்களுக்கு பொதுமக்கள் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் எந்த வகையிலும் ஏற்படாது.

அதிகரித்த விலைகளை சமாளித்து, வாகனங்களை வீதியில் ஓட்ட முடியும் என்றால், ஓட்டுங்கள். இல்லை என்றால் எரிபொருள் விலை மாற்றத்துக்கு ஏற்ப கட்டணங்களை குறைக்க வேண்டிய தேவை இருக்கின்றது. உதிரி பாகங்களை பொறுத்தே வீதிகளில் வாகனங்களை ஓட்டுமாறு பொதுமக்கள் ஒரு போதும் வலியுறுத்த வில்லை. இலாப நோக்கில் நீங்கள் ஓடுகின்றீர்கள். அதில் பொதுமக்கள் உங்களை பயன்படுத்திக் கொள்கின்றார்கள்.

கட்டண குறைப்பு விடயத்தில் அரசாங்கம் பேசாம மடந்தை என்ற நிலையிலேயே இருக்கிறது. நெருக்கடி நிலை உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் அரசாங்கம் செய்து கொண்ட ஒப்பந்தங்களும் வெளியிட்ட சுற்று நிருபங்களும் அரசாங்கம் சுயமாக செயல்படுவதற்கு தடையாக இருக்கின்றன.

கோவிட்-19 மிகவும் உச்சக்கட்டத்தில் பரவிக் கொண்டிருந்த பொழுது, சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட போக்குவரத்து வழிகாட்டி கட்டுப்பாடுகள் தொடர்பான சுற்று நிருபம் இன்னும் வாபஸ் பெறப்படவில்லை. வாகன போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பஸ் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டன. அவைகள் இன்னும் வாபஸ் பெறப்படாததனால், தனியார் பஸ் உரிமையாளர்களும் ஆட்டோ சாரதிகளும் அதே கட்டண அதிகரிப்புகளிலேயே வாகனங்களை ஓட்டுகின்றார்கள்.

உண்மையில்,இந்த நெருக்கடியான காலகட்டத்தில் அரசாங்கம் பெட்ரோல், டீசல் விலை குறைத்து இருப்பது என்பது மிகவும் பாராட்டக்கூடிய செயல்பாடு ஆகும். பெட்ரோலின் விலை முன்னர் பத்து ரூபாவினாலும் 40 ரூபாவினாலும் குறைக்கப்பட்டன.அதேபோல கடந்த வாரமும் 40 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு மாத காலப்பகுதிக்குள், பெட்ரோலின் விலை 100 ரூபாவால் குறைக்கப்பட்டிருக்கின்றது.

அதாவது,,460 ரூபாவாக இருந்த பெட்ரோலின் விலை, 370 ரூபா வரை கொண்டுவரப்பட்டிருக்கிறது. இது, வாழ்க்கை செலவை குறைப்பதற்காக அரசாங்கம் எடுத்திருக்கும் உச்சக்கட்ட நடவடிக்கை என்று கூட இதனை சொல்லலாம். ஆனால், இந்த விலை குறைப்பின் பலன் மக்களை சென்றடைந்ததா என்ற கேள்வி இப்பொழுது எழுப்பப்படுகிறது.

100 ரூபா விலை குறைப்பின் பலனை மக்கள் அனுபவிக்கவே இல்லை. ஆட்டோ கட்டணங்களையும் பஸ் கட்டணங்களையும் குறைக்க முடியாது என்று இந்தக் குட்டி முதலாளிகள் அறிவித்துள்ளார்கள். 460 ரூபாய் பெட்ரோல் விற்பனை செய்யப்படுகின்ற பொழுது ஆட்டோக்காரர்களும் தனியார் பஸ் உரிமையாளர்களும் அற விட்ட அதே கட்டணத்தை மாற்றமில்லாமல் இப்பொழுதும் ஓடுகிறார்கள்.
இவர்கள், இப்படி அடம் பிடித்துக் கொண்டிருப்பதில் என்ன நியாயம் இருக்கிறது என்பது புரியவில்லை.

விலையை குறைத்ததன் மூலம் அரசாங்கத்தினுடைய வருவாய் குறைந்து இருக்கிறது என்பது உண்மை. இந்த நூறு ரூபா விலை குறைப்பு, நாட்டின் தேசிய பொருளாதாரத்தில் குறிப்பிட்ட விழுக்காடு தாக்கத்தை ஏற்படுத்தியும் இருக்கிறது.

ஆனால்,இதன் பிரதிபலன்கள் நாட்டு மக்களுக்கு கிடைக்கவில்லை என்பதுதான் வருத்தம் தரக்கூடிய ஒரு விடயம். 460 ரூபாவாக இருந்த பெட்ரோலின் விலை இப்பொழுது 370 ரூபா. ஆட்டோ சாரதிகள் விடயத்திலும் தனியார் பஸ் உரிமையாளர்களுடைய விடயத்திலும் அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை இருக்கிறது. எரிபொருளுக்கான விலை 100 ரூபாய் குறைக்கப்பட்டு இருந்தபோதிலும் கட்டணத்தை குறைக்க முடியாது என்று அவர்கள் கூறுகின்ற காரணம் எந்த வகையிலும் ஏற்புடையதாக இல்லை.

விலை குறைப்பின் பலனை மக்கள் அனுபவிக்க வேண்டுமாக இருந்தால், இவர்களை கட்டுப்படுத்துகின்ற செயல்பாடுகளில் அரசாங்கம் இறங்கியே ஆக வேண்டும்.
விலை குறைப்பின் பயன்களை முதலாளிமார்கள் மாத்திரம் அனுபவித்தால் மக்கள் செலுத்துகின்ற வரிப்பணத்துக்கு என்ன பெறுமானம் இருக்கின்றது?
ஆட்டோக்காரர்களும் தனியார் பஸ் உரிமையாளர்களும் வருவாயை அதிகரிப்பதற்கு ஏதுவாகவா? அரசாங்கம் எரிபொருட்களின் விலையை குறைத்து இருக்கிறது என்று கேள்வி எழுப்பப்படுகிறது.

ஆகவே, அரசாங்கம் தன்னை இன்னும் பலவீனமாக காட்டிக்கொண்டு இருக்காமல், மக்கள் நலன் சார்ந்த வேலை திட்டங்களுக்காக அதிகாரத்தை கையில் எடுத்து, சுரண்டல் காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Ceylonsri – குணா

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்