ராஜபக்ஷக்கள் திருடிய டொலர்களை மீளக் கொண்டு வந்தாலே நாட்டுக்கு மீட்சி :சஜித்

58

மக்கள் மீது வரி விதிக்காது,கடந்த ஒரு தசாப்த காலமாக பல்வேறு ஒப்பந்தங்கள், நிர்மாணப் பணிகள் சார்ந்த கொந்தராத்துகள்,கொடுக்கல் வாங்கல்கள் மூலம் ராஜபக்ச குடும்பத்தினரால் கொள்ளையடிக்கப்பட்ட நமது நாட்டின் செல்வத்தை மீட்டெடுத்து அதன் மூலம் அரச வருவாயை அதிகரிக்க முடியும் எனவும், திருடர்களைப் பிடிப்பதன் மூலம் அவர்களால் திருடப்பட்ட டொலர்களை மீண்டும் நாட்டுக்குக் கொண்டு வருவதன் மூலமும் நாட்டின் வருமானத்தைப் பெருக்க முடியும் எனவும்,பெரும் தொகை பணம் இவ்வாறு நாட்டிற்கு வெளியே உள்ளதாகவும், தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு இதுவே உடனடியான ஒரே தீர்வாக அமைய முடியும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

குருநாகல் தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் நேற்று முன்தினம் (16) கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சியாக எந்தவொரு அரசியல் பழிவாங்கலையோ அல்லது தனிநபர்களை குறிவைத்த அரசியல் பழிவாங்கல்களையே அங்கீகரிக்காவிட்டாலும், எமது நாட்டிலிருந்து திருடப்பட்ட அனைத்து டொலர்களும் எதிர்காலத்தில் நிறுவப்படவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரப்படும் எனவும், அந்த அரசாங்கத்தின் அரச வருவாயை அதிகரிக்கும் அதிகாரம் நிதி அமைச்சருக்கும் போலவே திருடர்களைப் பிடிக்கும் அமைச்சருக்கும் வழங்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

வணிகங்கள்,கேள்வியும் நிரம்பலும், விநியோகம், போன்றவற்றைச் சுருக்கி தற்போதைய வக்குரோத்து நிலையிலிருந்து மீள்வதே நடப்பு அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையாகும் எனவும்,தற்போது வட்டி விகிதம் கூட 30 சதவீதத்தை தாண்டி விட்டதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,தற்போதைய அரசாங்கம் சாதாரண மக்கள் மீது வரிச்சுமையை சுமத்தாது கோடீஸ்வரர்கள் மீது அந்த வரிச்சுமை சுமத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

குருநாகல் நகரத்தை புதிய தொழில்நுட்ப வசதிகளைப் பெற்ற நவீன நகரமாக மாற்றப்படும் எனவும்,ஐக்கிய அமெரிக்க குடியரசிலுள்ள சிலிக்கான் பள்ளத்தாக்கு போன்ற நகரங்கள் நம் நாட்டிலும் உருவாக்கப்பட வேண்டும் எனவும்,நாட்டின் டொலர் நெருக்கடியைத் தீர்க்க தகவல் தொழில்நுட்பத்தை நாடு முழுவதும் பரப்ப வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வலையொளி இணைப்பு-

Join Our WhatsApp Group