கீவ்: உக்ரைனில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலின் காரணமாக, கீவ் உள்ளிட்ட நகரங்கள் மின் தடையால் இருளில் மூழ்கியுள்ளன. இதனால், உக்ரைன் மக்கள் பரிதவித்துள்ளனர்.
ஐரோப்பிய யூனியன், நேட்டோவில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதனால் தங்கள் நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என கருதிய ரஷ்யா, உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதல் நடத்தி வருகிறது. எனினும், பெரும்பாலும் ராணுவ நிலைகளை மட்டும் குறிவைத்து தாக்குதல் நடத்தி வந்தது.
கிரீமியா தீபகற்ப பகுதியை ரஷ்யாவுடன் இணைக்கும் பாலத்தில் கடந்த 8-ம் தேதி வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட லாரி வெடித்துச் சிதறியது. இதனால் பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது. ‘கிரீமியா பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் பாலத்தை தகர்க்கும் முயற்சி தீவிரவாத செயலுக்கு நிகரானது. உக்ரைன் ராணுவம்தான் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளது’ என ரஷ்ய அதிபர் புதின் குற்றம் சுமத்தினார். ஆனால், இதற்கு உக்ரைன் பொறுப்பேற்கவில்லை.
இந்த நிலையில், தொடர்ந்து உக்ரைனின் முக்கிய இடங்களில் ரஷ்யா தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் திங்கட்கிழமை இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் உக்ரைனின் முக்கிய மின் உற்பத்தி நிலையங்கள் பாதிக்கப்பட்டன. இதனால் கீவ் உள்ளிட்ட நகரங்களில் மின் தடையும், தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, “உக்ரைனின் 30% மின் நிலையங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. இதனால் நாடு முழுவதும் பெரும் மின்தடை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மின் உற்பத்தி பணியை சரிசெய்ய முயற்சி நடந்து வருகிறது” என்றார்.
5 பேர் பலி: உக்ரைனின் சுமி நகரில் நடந்த தாக்குதலில் பொதுமக்கள் 5 பேர் பலியாகினர். மேலும், உக்ரைனின் இரண்டு விஞ்ஞானிகளை ரஷ்யா கடத்தி சென்றுள்ளதாகவும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.