பல்வேறு வர்த்தகர்கள் உள்ளிட்ட நபர்களிடம் இருந்து பணத்தை பெற்று மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலிணி பிரியமாலி மற்றும் அவரது வர்த்தக பங்காளர் என தெரிவிக்கப்படும் இசுறு பண்டார ஆகியோருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
பல கோடி ரூபா நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த ஒக்டோபர் 05ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) திலிணி பிரியமாலி கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, அவரது வர்த்தக பங்காளர் என தெரிவிக்கப்படும் இசுறு பண்டார நேற்று முன்தினம் குற்றப் புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டார். இசுறு பண்டார நேற்றையதினம் (18) அவர் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு இன்றையதினம் (19) வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டது.
அதற்கமைய, சந்தேநபர்கள் இன்று கோட்டை நீதவான் முன்னிலையில் வீடியோ தொழில்நுட்பம் மூலம் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, சந்தேகநபர்களுக்கு எதிர்வரும் நவம்பர் 02 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்குமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டார்.