20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இலங்கை-ஐக்கிய அரபு அமீரகம் இன்று மோதல்

30

கீலாங்: 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் முதல் சுற்றில் ‘ஏ’ பிரிவில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் கீலாங்கில் நடக்கின்றன. இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில் நமிபியா-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

ஜெர்ஹர்ட் எராமஸ் தலைமையிலான நமிபியா அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 55 ரன்கள் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியனான இலங்கைக்கு அதிர்ச்சி அளித்து அபார வெற்றி பெற்றது. இதேபோல் ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணி முதலாவது லீக் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை தோற்கடித்தது. வெற்றி உற்சாகத்துடன் களம் காணும் இந்த இரு அணிகளும் 2-வது வெற்றியை ருசித்து அடுத்த சுற்று (சூப்பர் 12) வாய்ப்பை உறுதி செய்ய கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

இவ்விரு அணிகளும் சர்வதேச 20 ஓவர் போட்டியில் இதுவரை இரண்டு முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் நமிபியா, நெதர்லாந்து அணிகள் தலா ஒரு வெற்றி பெற்று இருக்கின்றன. பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் 6-வது லீக் ஆட்டத்தில் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை-சுன்டன்காபொயில் ரிஸ்வான் தலைமையிலான ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் சந்திக்கின்றன. இலங்கை அணி முதல் ஆட்டத்தில் நமிபியாவிடம் தோல்வி கண்டது.

இதேபோல் ஐக்கிய அரபு அமீரக அணி, நெதர்லாந்திடம் பணிந்தது. அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இரு அணிகளும் கடுமையாக வரிந்துகட்டும். முதல் ஆட்டத்தில் சொதப்பிய இலங்கை அணி இந்த ஆட்டத்தில் எழுச்சி பெற்று அமீரகத்துக்கு ‘செக்’ வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு அணிகளும் இதற்கு முன்பு சர்வதேச 20 ஓவர் போட்டியில் ஒரே ஒருமுறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இலங்கை அணி வெற்றி பெற்று இருந்தது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Join Our WhatsApp Group