சுபீட்சமானதோர் தேசம் – ஒரு இலட்சம் வெளிநாட்டு வேலைவாயப்புகள் எனும் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பில் ஜப்பான் மொழி பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாட்டிலுள்ள வேலையற்ற இளைஞர் யுவதிகளை வேலைவாய்ப்பிற்காக ஜப்பான் நாட்டிற்கு அனுப்பிவைக்கும் நோக்கில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் திணைக்களம் என்பன இணைந்து நடாத்தும் ஜப்பான் மொழிப் பயிற்சி பட்டறை மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரனின் வழிகாட்டலில், சமுர்த்தி திணைக்கள மாவட்ட பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் தலைமையில் இன்று (17) மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஜப்பான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் செய்து கொண்ட உடன்படிக்கைக்கமைவாக ஒருஇலட்சம் இளைஞர் யுவதிகளை வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக ஜப்பான் நாட்டிற்கு அனுப்புவதற்காக அந்நாட்டு மொழியினை இவ்இளைஞர் யுவதிகளுக்ககு கற்பிக்கும் தேசிய வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிராமசேவகர் பிரிவிற்கு இருவர் என்ற அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளில் 50 பேர் முதற்கட்டமாக ஜப்பான் மொழியினைக் கற்பிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதன்போது அரசாங்க அதிபர் கருணாகரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் இம்மாவட்டத்தில் மொழிப்பயிற்சி நிலையம் அமையப்பெற்றிருப்பது இளைஞர் யுவதிகளுக்கு இது ஓர் அரிய வாய்ப்பு. இதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். ஒரு மொழியை மாத்திரமன்றி அம்மக்களுடைய கலாசார பண்பாடுகளையும் அறிந்துகொள்ள வாய்ப்பளிக்கின்றது. இப்பயிற்சியினைத் தொடரும் இளைஞர் யுவதிகள் ஜப்பான் நாட்டிற்கு செல்லவேண்டும் என்ற கனவுடனும் ஆர்வத்துடனும் கற்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.







மேலும் இப்பாடநெறிக்கான வளவாளர், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன். இவர் தனது முதுமாணிக் கற்கையினை ஜப்பான் நாட்டில், ஜப்பான் மொழியில் இரண்டுவருடங்கள் அங்கேயே தங்கியிருந்து கற்றவர். சிறந்த ஆளுமையுள்ளவர். இது எமது மாவட்டத்திற்கு கிடைத்த வரம் எனவும் தெரிவித்தார்.
இதன்போது சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள மாவட்ட கணக்காளர் எஸ்.எம். பசீர், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக மட்டக்களப்பு மாவட்ட நிலையப் பொறுப்பதிகாரி எ.பீ.எம். சலீம், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள மாவட்ட தலைமை முகாமையாளர் ஜே.எப். மனோகிதராஜ், ஜப்பான் மொழிப்பயிற்சி நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் எம். அலிஅக்பர், சமுர்த்தி முகாமையாளர்கள், பயிற்சியாளர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
சுமார் 300 மனித்தியாலங்கள் கொண்ட நெட்-5 தரத்திலான இக்கற்கை நெறியினைப் பூர்தி செய்தபின்னர் பரீட்சையினை எதிர்கொள்ளவேண்டும். இப்பரீட்சையில் சித்தி பெறுபர்களுக்கு ஒரு இலட்சத்தி 25ஆயிரம் ரூபா வரையிலான சம்பளத்துடன் வேலைவாய்ப்பினைப் பெற்றுக் கொள்ளமுடியும். மேலும் 300 மணித்தியாலங்கள் கொண்ட நெட்-4 தரத்திலான கற்கையினைப் பூர்த்தி செய்பவர்கள் நேர்முகத்தேர்விற்குப்பின்னர் சுமார் 7 இலட்சம் ரூபா வரையிலான சம்பளத்துடன் வேலைவாய்ப்பினைப் பெற்றுக் கொள்ளமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.