** மொட்டுக் கட்சியின் நிர்ப்பந்த கைதி நிலையில் ரணில்.
ரணில் அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
பாராளுமன்றத்தில் ஆக கூடுதலான ஆசனங்களை கொண்டு செயல்படுகின்ற பொது சன பெரமுன, அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தத்திற்கு சில நிபந்தனைகளை விதித்திருந்தன. அந்த நிபந்தனைகளை கைவிடுவதாக மொட்டு கட்சியின் பொதுச் செயலாளர் சாகல காரியவசம் அறிவித்துள்ளார்.
இரட்டை பிரஜா உரிமை, சுதந்திர ஆணை குழுக்கள் தொடர்பான தங்களது நிபந்தனைகளை கைவிடுவதாக அவர் அறிவித்துள்ளார். இந்த நிலையில், பொது சன பெரமுன, கட்சியின் முக்கியஸ்தர்கள் அடுத்த வாரம் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தீர்மானித்திருக்கிறார்கள்.
அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தத்தை நிபந்தனையற்ற முறையில் நிறைவேற்றுவதற்கு பொது சன பெரமுன, ஆதரவு வழங்குவதாக தெரிவித்திருந்தாலும், ஜனாதிபதியிடம் மறைமுகமான அழுத்தங்களை கொடுத்து வருகிறார்கள் என்பது ஓரளவு புரியக் கூடியதாக இருக்கிறது.
மக்கள் எழுச்சி போராட்டத்தினால் நிலை குலைந்து, வாழ்வு இழந்து இருந்த இந்த பொது சன பெரமுன, இப்போது, திடீரென பிராண வாயு சுவாசித்தவர்கள் போல் எழுந்து நிற்க முயற்சி செய்கிறார்கள். அமைச்சரவையில் தங்களுக்கு கூடுதலான இடம் வழங்கப்பட வேண்டும் என்பது மொட்டுக் கட்சியின் மிகப்பெரிய நிபந்தனையாக இருக்கிறது.
மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமர் ஆக்க வேண்டும், ஜோன்ஸ்டன் பெனாண்டோ, மஹிந்தானந்த அழுத்கமகே உட்பட மக்கள் நம்பிக்கை இழந்த பலர், அமைச்சர்களாக மீண்டும் நியமிக்கப்பட வேண்டும் என்பது பொது சன பெரமுனவின் அழுத்தங்களாக இருக்கின்றன. பொது சன பெரமுன எம்பிக்களை அதிகமாகக் கொண்ட இந்த பாராளுமன்றத்தில், நிபந்தனை கைதிகள் போல் இருக்கின்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மொட்டுக் கட்சியின் வேண்டுகோள்களை மறைமுகமாக நிறைவேற்றி வருகின்றார்.
என்றாலும், ஜோன்ஸ்டன் பெனாண்டோ, மஹிந்தானந்த அழுத்கமகே போன்றவர்களுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பொறுப்புகளை மீண்டும் வழங்குவதற்கு ஜனாதிபதி தயாராக இல்லை என்பது தெரிகிறது. நாட்டை சீரழித்தவர்களில் இவர்கள் இருவரும் முக்கியமானவர்கள் என்ற நிலையில் மக்களால் மானசீகமாக நிராகரிக்கப்பட்டவர்கள் இவர்கள் என்பது அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சேவை வைத்துக்கொண்டு, தங்களது அரசியல் காய் நகர்தல்களை முன்னெடுத்து நாட்டை நாசமாக்கி இவர்கள் என்பது குற்றச்சாட்டாக இருந்து வரும் நிலையில், மீண்டும் இவர்களுக்கு அமைச்சர் பொறுப்புகளை வழங்குவது, தனது எதிர்கால அரசியலுக்கு குந்தகமாக அமையும் என ரணில் விக்கிரமசிங்க நினைக்கிறார். இன்றைய கடன் நிலவரம் அதனை தான் சொல்கிறது.
புதிய அமைச்சரவை நியமனம் இழுபறி பட்டு போவதற்கு இதுதான் காரணம் என்று அரசியல் உயர் மட்டங்களில் இருந்து தெரிகிறது.
இந்த நிலையில், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று ( 17.10.2022 ) நடந்த இந்த சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நடந்திருக்கிறது. இந்த நீண்ட நேர சந்திப்பின் போதும், அமைச்சரவை மாற்றம், புதிய பிரதமர் நியமனம், பொது சன பெரமுன, அரசாங்கமே ஆட்சியில் இருக்கிறது என்பதை தெரியப்படுத்தும் வகையிலான செயல் திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் மஹிந்த ராஜபக்ச பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார் என்பது தான் பிந்திய தகவலாக இருக்கிறது.
நாட்டை சீரழித்து மக்களை நடுத்தெருவில் விட்ட இந்த கட்சியினர், மக்கள் மத்தியில் புது வடிவம் எடுக்க முயற்சி செய்கின்றார்கள். ஆயிரக்கணக்கான படைபட்டாளங்களுடன் மாவட்டம் மாவட்டமாக செல்லும் மொட்டுக் கட்சித் தலைவர்கள், தவறுக்கு மன்னிப்பு கேட்டு மக்கள் மத்தியில் புது வடிவம் எடுக்கலாம் என்பது இவர்களது கற்பனா வாதமாக இருக்கிறது.
மொட்டுக் கட்சியின் பிடிவாதமும், மஹிந்த ராஜபக்சவின் அடம் பிடிப்பும் மக்கள் தங்களோடு இருக்கிறார்கள் என்ற நிலையில் தான் இருக்கிறது. ஒரு நேர சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் மக்கள், மஹிந்த தரப்பின் அரசியலுக்குள் சிக்குவதற்கு இன்னும் முட்டாள்கள் இல்லை. இனவாதம் என்ற துரும்பை விதைத்து, மக்களை தன் வசப்படுத்தலாம் என்று மொட்டுத்தரப்பு நினைத்தால்,…. “முடவன் கொம்பு தேனுக்கு “ஆசைப்பட்ட கதையாகவே முடியும்.
மொட்டுக் கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ அமெரிக்கா சென்றுவிட்ட நிலையில், தலைமையை கை ஏற்று மஹிந்த களமிறங்கி இருக்கிறார். நாமல் ராஜபக்சவை கட்சியின் தலைமை பொறுப்புக்கு கொண்டு வரும் காய் நகர்த்தல்களை செய்தவாறு மஹிந்த தனது நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறார் என்பது அரசியல் அவதானிகளின் பார்வையாக இருக்கிறது.
ஜனநாயகத் தேர்தல் ஒன்றின் மூலம் கூடுதல் ஆசனங்களை பெற்றவர்கள் மொட்டு கட்சியினர். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. இதன்படி, பாராளுமன்றத்தில் கூடுதல் ஆசனங்களும் அவர்களிடம் இருக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது.
ஆகவே,பாராளுமன்றத்தில் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி மீண்டும் மக்கள் மத்தியில் நுழையலாம் என்பது மஹிந்த ராஜபக்சவின் காய் நகர்த்தல்.
அதற்காக, தங்களின் அனுசரணையுடன் நியமிக்கப்பட்டிருக்கின்ற ஜனாதிபதியை, இப்போது அவர்கள் பயன்படுத்த பார்க்கிறார்கள். இதற்கான அழுத்தங்களை மொட்டு கட்சியினரும் மஹிந்தவும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பொறுத்த வரைக்கும், நிர்பந்தக் கைதி என்ற நிலையில் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். பாராளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவரது கட்சி சார்பில் யாரும் இல்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தப்பிப் பிழைத்து பாராளுமன்றம் வந்தவர் அவர். எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் அவருக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக இல்லை.
ஆகவே, அவர் விரும்பியோ விரும்பாமலோ, மஹிந்த தரப்பை நம்பியவராகவே ரணில் விக்ரமசிங்க இருக்கிறார். அதாவது,மொட்டு கட்சியினர் சொல்வதை கேட்பதை தவிர அவருக்கு வேறு வழி இல்லவே இல்லை. அமைச்சரவை நியமனத்தில், ஜனாதிபதி என்ற வகையில், ரணில் தனது நிலைப்பாட்டை இறுக்க முனைந்தாலும், அது தனது தலைக்கு தானே மண்ணள்ளி போடுவதாக அமையும்.
ஆகவே,மஹிந்த ராஜபக்ச ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதும், பசில் ராஜபக்ஷ அமெரிக்காவில் இருந்து ரணிலுடன் தொடர்பு கொண்டிருப்பதும், கட்சியின் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதியை சந்திப்பதற்கு முயற்சிப்பதும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பாரிய அழுத்தமாகவே அமையும்.
மொட்டுக் கட்சியினரின் இந்த அழுத்தங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈடு கொடுப்பாரா? அல்லது, மொட்டு கட்சியின் உறுப்பினர் போலவே செயல்படுவாரா…?
Ceylonsri – குணா.