‘ஜெயிலர்’ இரண்டாம் கட்ட படப்பிடிப்பு.. ரசிகர்களை உற்சாகப்படுத்திய ரஜினி..

55

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடலூரில் நடைபெற்று வருகிறது. நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதையடுத்து, ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடலூர் மாவட்டம் அழகிய நத்தம் பகுதியில் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. தென்பெண்ணை ஆற்றின் பாலத்தில் நடைபெறும் இந்த படப்பிடிப்பில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த பகுதியில் பொது மக்கள் யாரும் அனுமதியில்லை என்பதால் படப்பிடிப்பு நடக்கும் பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலேயே பொதுமக்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றனர்.

மேலும், இதில் நடிகர் ரஜினி மற்றும் முக்கிய கதாபாத்திரங்கள் பங்கேற்றுள்ளதால் போலீசாரின் உரிய பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினி புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு காரில் சென்றபோது, புதுச்சேரியில் அவரது ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்பை அளித்தனர். இதையடுத்து தனது காரின் கண்ணாடியை கீழிறக்கி ரசிகர்களை பார்த்து ரஜினி கையசைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Join Our WhatsApp Group