சூட்சுமமான முறையில் யாழில் போதை மாத்திரை விற்பனை! கையும் களவுமாக சிக்கிய இளைஞர்கள்.

29

மின்சாதங்கள் விற்பனை செய்பவர்கள் போல் பாசாங்கு காட்டி போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவரை கோப்பாய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். யாழ். கல்வியன்காடு ஞானபாஸ்கரோதயா விளையாட்டரங்கு வீதியில் வைத்து நேற்று மாலை இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 30 வயதுடையவர்கள் என்றும் ஒருவர் சுன்னாகம் பகுதியை சேர்ந்தவர் என்றும் மற்றைய நபர் கல்வியன்காடு விளையாட்டரங்கு வீதியை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இரகசிய தகவல் : குறித்த பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக கோப்பாய் காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்திருந்தது. அதன்படி, கல்வியன்காடு ஞானபாஸ்கரோதயா விளையாட்டரங்கு வீதி பகுதியில் காவல்துறையினர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது, உந்துருளியில் பெட்டியுடன் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய இருவரை மறித்து காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். இதன்போது, 15 சுடுதண்ணீர் போத்தல்கள், மின்குமிழ்கள், ரோச் லைட்கள் என்று மின்னியல் சாதனங்களுடன் 100 போதை மாத்திரைகளும் அவர்களிடம் இருந்துள்ளன.

அதனையும் அவர்கள் உடைமையில் வைத்திருந்த 18 000 பணத்தையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். மின்சாதனங்கள் விற்பனை செய்வது போல் நடமாடினால் யாருக்கும் சந்தேகம் வராது என்பதால் அதனை விற்பனை செய்வது போல் செய்வதாக சந்தேக நபர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். 

Join Our WhatsApp Group