சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு ஆரம்பம்: மீண்டும் அதிபராகிறார் ஜி ஜின்பிங்

16

பெய்ஜிங்: சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வதுதேசிய மாநாடு தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில், தற்போதைய அதிபர் ஜி ஜின்பிங் (69), 3-வது முறை அதிபராக தேர்வு செய்யப்பட உள்ளார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இதில்,கட்சியின் பொதுச் செயலர் தேர்வுசெய்யப்படுகிறார். அவரே நாட்டின் அதிபராகவும் பதவியேற்கிறார்.

இந்த நடைமுறைப்படி 2013 மார்ச் 14-ம் தேதி சீன அதிபராக ஜி ஜின்பிங் பதவியேற்றார். 2017-ல்2-வது முறையாக அவர் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவிக் காலம் வரும் 22-ம் தேதியுடன் நிறைவடைகிறது. புதிய அதிபரைத் தேர்வு செய்வதற்காக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது தேசிய மாநாடு தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் கட்சி நிர்வாகிகள் 2,296 பேர் பங்கேற்றுள்ளனர். வரும் 22-ம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் கட்சியின் மத்தியக் குழுவுக்கு 200 உறுப்பினர்களும், ஆட்சிமன்றக் குழுவுக்கு 25 உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இறுதியாக கட்சியின் பொதுச் செயலர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

சீன அரசமைப்புச் சட்டத்தின்படி ஒருவர் 10 ஆண்டுகள் மட்டுமே அதிபராக நீடிக்க முடியும் என்ற வரம்பு இருந்தது. 2018 மார்ச் மாதம் நடைபெற்ற சீன நாடாளுமன்றக் கூட்டத்தில், அதிபர் பதவிக்கான 10 ஆண்டுகள் வரம்பு சட்டப்பூர்வமாக நீக்கப்பட்டது. இதன்படி, தற்போது நடைபெறும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது தேசிய மாநாட்டில், சீன அதிபர் ஜி ஜின்பிங் 3-வது முறையாக கட்சியின் பொதுச் செயலராகத் தேர்வு செய்யப்பட்டு, அதிபராகப் பதவியேற்க உள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 23-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

Join Our WhatsApp Group