** ஐநா அலுவலகம் முன் திரண்டு கோஷம்
** கொழும்பு பெளத்த லோக மாவத்தையில் போலீஸ் குவிப்பு
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொழும்பு: பௌத்தலோக மாவத்தையிலுள்ள ஐநா அலுவலகத்தின் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. இன்று காலை 8 மணி அளவில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து வந்த, காணாமல் போனோரின் உறவினர்கள் பங்கேற்றுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மாரே கூடுதலாக பங்கேற்று இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஐநா அலுவலகத்தின் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவதனால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
” எங்களுக்கு ஆணை குழுக்கள் வேண்டாம்…. நீதியே வேண்டும்.
“நாங்கள் ஒப்படைத்த பிள்ளைகள் எங்கே….?
“இலட்சத்தைக் காட்டி எங்களை ஏமாற்றாதீர்கள்….!” ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருக்கின்ற தாய்மார்கள் இவ்வாறான கோஷங்களை எழுப்புகின்றனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சார்பில், ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் வதிவிடப் பிரதிநிதியிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.







