அரசாங்கம் ஒரே குரலில் பேசவேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கருத்து தெரிவித்துள்ளார். அரசாங்கம் அறிவித்து பின்னர் கைவிடப்பட்ட கொழும்பின் உயர் பாதுகாப்பு வலயங்கள் குறித்த கேள்வியொன்றிற்கு நேர்காணல் ஒன்றின்போது பதிலளிக்கையில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் ஒரே குரலில் பேசவேண்டும் என நான் கருதுகின்றேன் பாதுகாப்பு தரப்பினர் நீதி அமைச்சு ஜனாதிபதி அலுவலகம் வெளிவிவகார அமைச்சு ஆகியன தீர்மானங்களை எடுக்கும்போது அனைத்து விடயங்களையும் கருத்திலெடுக்கவேண்டும்- தேவையற்ற விதத்தில் இலங்கையை எந்த தரப்பினரும் ( உள்நாட்டவர்கள் வெளிநாட்டவர்கள்) விமர்சிப்பதற்கு பதிலளிக்காத விதத்தில் தீர்வை காணவேண்டும் எனவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பொதுமக்களும் அதற்கு கால அவகாசத்தை வழங்கவேண்டும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரி 8 வீதம் மாத்திரமே நாட்டை எவ்வாறு நிர்வகிப்பது குறிப்பாக இலவச கல்வி சுகாதாரம் காணப்படும்போது எனவும் வெளிவிவகார அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எங்கள் ஏற்றுமதி வருமானம் 14 வீதமாக குறைவடைந்துள்ளது. நாங்கள் பயணிக்கும் திசையை மாற்றவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடினமான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. ஜனாதிபதி பொருளாதார விடயங்களில் திறமையானவராக காணப்படுவது குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன். பரந்துபட்ட அடிப்படையில் விடயங்களை சிந்தித்து அவர் தீர்மானங்களை எடுக்கின்றார் எனவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நீங்கள் ஜனாதிபதியை விரும்பலாம்,விரும்பாமலிருக்கலாம் ஆனால் என்ன செய்யவேண்டும் என்பதை ஜனாதிபதி புரிந்துகொண்டுள்ளார் எனவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.