நூறு ஏக்கர் காணி தனியாருக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து நாவலப்பட்டியில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

70

தமது தோட்டப்பகுதியில் உள்ள நூறு ஏக்கர் காணி தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாவலப்பிட்டிய போஹில், பாரண்டா தோட்டங்களில் வாழும் தொழிலாளர்கள் இன்று (14) பாரண்டா தோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ள மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்கு (ஜனவசம) உரித்தான காணியே இவ்வாறு தனி நபருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் பல தசாப்தங்களாக வாழும் மக்களின் இருப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

இ.தொ.காவின் உப தலைவர் பாரத் அருள்சாமியும் தொழிலாளர்களுடன் இணைந்து போராட்டத்தில் பங்கேற்றார்.இதன்போது அவர் கூறியவை வருமாறு, “நாம் நீதிமன்ற தீர்ப்பை மதிப்போம். அதற்கு கட்டுப்படுவோம். 100 ஏக்கர் காணி தனியாருக்கு வழங்கப்பட்டால், அத்தோட்டங்களில் வாழும் மக்களுக்கான இருப்பிடம், பாடசாலை, சிறுவர் பராமரிப்பு நிலையம், கடைகள், வணகஸ்தலங்கள் என்பவற்றுக்கு என்ன நடக்கும்? இவை தொடர்பில் ஜனவசம இன்னும் உரிய பதிலை வழங்கவில்லை”.

2005ம் ஆண்டிலிருந்து இந்த பிரச்சினை ஒரு தொடர் கதையாகவே இருந்து வந்துள்ளது. ஜனவசமவின் அசமந்தபோக்கால்தான் மக்கள் நிர்க்கதியாக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் எமது பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கு தெரியப்படுத்தியுள்ளோம். மக்கள் பெருந்தோட்ட யாக்கத்தின் தலைவர் மற்றும் பெருந்தோட்ட தொழில்துறை அமைச்சர் ஆகியோருடன் இ.தொ.கா. பேச்சு நடத்தும்.
 
இ.தொ.கா. என்றும் மக்கள் பக்கம்தான் நிற்கும், சிலவேளை, தொழிலாளர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் 250 குடும்பங்களின் சார்பிலும் ஜனவசமக்கு எதிராக நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைமீறல் வழக்கு தாக்கல் செய்வதற்கும் இ.தொ.கா தயாராகவே உள்ளது.” – என்றார்.

Join Our WhatsApp Group