சனத் நிஷாந்த கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிப்பு.

32

அடுத்த வழக்குத் தவணைக்கு உரிய நேரத்திற்கு சமூகமளிக்குமாறும் பணிப்பு
இன்றையதினம் (13) நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமை தொடர்பில் உடனடியாகக் கைது செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிடியாணை உத்தரவிட்டதையடுத்து, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த நீதிமன்றத்தில் ஆஜரானார். இதனைத் தொடர்ந்து அவர் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று (13) மு.ப. 10.00 மணிக்கு அவர் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டியிருந்த நிலையில், குறித்த நேரத்திற்கு சமூகமளிக்காத நிலையில் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து சிறிது தாமதமாக, தனது சட்டத்தரணி மூலம் நீதிமன்றில் ஆஜரான அவரை, கடுமையாக எச்சரித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன, எதிர்வரும் தவணைகளில் வழக்கு விசாரணைகளுக்கு உரிய நேரத்திற்கு சமூகமளிக்குமாறு உத்தரவிட்டார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ​​நீதித்துறை மற்றும் நீதவான்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாகக் கூறி நீதிச் சேவைகள் ஆணைக்குழு மற்றும் சட்டத்தரணிகள் பலரால் மேன்முறையீட்டு நீதிமன்றில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு எதிராக மனு தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளுக்கு நீதிமன்றம் ஏன் தண்டனை விதிக்கக்கூடாது என்பதற்கான காரணங்களை, இன்று (13) நீதிமன்றில் ஆஜராகி வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இராஜாங்க அமைச்சருக்கு உத்தரவிட்டிருந்தது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன, ஆர்.குருசிங்க ஆகியோர் முன்னிலையில் இந்த மனு இன்று முற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இன்று (13) உரிய நேரத்திற்கு நீதிமன்றில் முன்னிலையாகாததால், அவரை உடனடியாக கைது செய்யுமாறு பொலிஸ் மா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Join Our WhatsApp Group