ஏலத்தில் சாதனை படைத்த அரிய வகை இளஞ்சிவப்பு நிற ‘பிங்க் ஸ்டார்’ வைரம்

59

ஹாங்காங்: அரிய வகை இளஞ்சிவப்பு நிற வைரமான ‘வில்லியம்சன் பிங்க் ஸ்டார்’ வைரம் 57.7 மில்லியன் டாலர்களுக்கு(இந்திய மதிப்பில் சுமார் ரூ.474 கோடி) ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. அதன் மதிப்பிடப்பட்ட விலையை விட 2 மடங்கு அதிக விலைக்கு இந்த வைரம் விற்பனையாகியுள்ளது.

இதன் மூலம் ஏலத்தில் அதிக விலைக்கு விற்கப்பட்ட இளஞ்சிவப்பு வைரங்களில் இது 2-வது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன்பு கடந்த 2017-ம் ஆண்டு ‘சி.டி.எப். பிங்ஸ் ஸ்டார்’ என்ற வைரம் 71.2 மில்லியன் டாலர்களுக்கு(இந்திய மதிப்பில் சுமார் ரூ.585 கோடி) விற்பனையாகி சாதனை படைத்தது.

தற்போது இந்த ‘வில்லியம்சன் பிங்க் ஸ்டார்’ வைரத்தை அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஏலத்தில் எடுத்துள்ளார். சமீப காலமாக உலகளாவிய ஏலச்சந்தையில் வண்ண வைரங்களுக்கான மதிப்பு அதிகரித்துள்ளதாகவும், சிறந்த சொத்துக்களை தேடும் முதலீட்டாளர்கள் இவற்றை அதிகம் விரும்புவதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Join Our WhatsApp Group