இலங்கையில் நீதித்துறை கட்டமைப்பை மறுசீரமைப்பதன் அவசியம்.

48
  • அமைச்சர் விஜயதாஸ பொதுமக்களின் கேள்விகளுக்கு நாளை ட்விட்டர் ஊடாக பதில்

இலங்கையில் நீதித்துறைக் கட்டமைப்பை மறுசீரமைப்பதன் அவசியம் தொடர்பில் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்‌ஷ கலந்துகொள்ளும் நேரடி ட்விட்டர் கலந்துரையாடல் நாளை (14) மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை பாராளுமன்ற உத்தியோகபூர்வ ட்விட்டர் (@ParliamentLK) கணக்கினூடாக இடம்பெறவுள்ளது.
இந்நாட்டில்  நீதித்துறைக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள், அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் சிறைச்சாலை கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பான பொதுமக்கள் கேள்விகளை #LKaskMP ஊடாக முன்வைக்க முடியும் என்பதுடன், அன்றைய தினம் நேரடியாக இணைந்து கொண்டும் கேள்விகளை முன்வைக்க முடியும்.

விசேடமாக ஒக்டோபர் 19 ஆம் திகதி நீதி அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள 06 சட்டமூலங்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டமூலம், நொத்தாரிசு (திருத்தச்) சட்டமூலம், அற்றோணித் தத்துவம் (திருத்தச்) சட்டமூலம், ஆவணங்களைப் பதிவு செய்தல் (திருத்தச்) சட்டமூலம், விருப்பாவணங்கள் (திருத்தச்) சட்டமூலம், மோசடிகளைத் தடுத்தல் (திருத்தச்) சட்டமூலம் என்பன விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளதுடன் இது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

பொதுமக்கள் மைய பாராளுமன்றத்திற்காக மக்கள் பிரதிநிதிகளையும் பொதுமக்களையும் நேரடியாக தொடர்புபடுத்தும் வகையில் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் இந்த நேரடி ட்விட்டர் கலந்துரையாடல் தொடரை ஏற்பாடு செய்துவருகின்றது.

Join Our WhatsApp Group