26 ஆண்டுகள் சிறைத் தண்டனை: மியான்மர் ராணுவத்தால் ‘பழிவாங்கப்படும்’ ஆங் சான் சூகி

40

நய்பிடா: மியான்மர் நாட்டுத் தலைவர் ஆங் சான் சூகிக்கு ஊழல் வழக்குகளில் மேலும் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையை விதித்து அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுவரை மியான்மர் ராணுவத்தால் ஆங் சாங் சூகிக்கு 26 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது. எனினும், தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி ஆங் சாங் சூகியின் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு ராணுவம் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியது. 76 வயதான ஆங் சான் சூகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியைத் தூண்டுவது, கரோனா விதிகளை மீறியது, அலுவல் ரீதியான சட்டங்களை மீறுதல், ஊழல் வழக்குகள் என்று ஆங் சான் சூச்சி மீது 11 குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வழக்குகள் தொடரப்பட்டன. இது தொடர்பான விசாரணை மியான்மர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியை தூண்டியது, கரோனா விதிகளை மீறியது ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளில் சூச்சிக்கு சுமார் 23 ஆண்டுகள் வரை மியான்மர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த நிலையில், இன்னொரு ஊழல் வழக்கில் ஆங் சான் சூச்சிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை மியான்மர் ராணுவ நீதிமன்றம் விதித்துள்ளது. இதன்மூலம் தற்போது 26 ஆண்டுகள் சிறைத் தண்டனையை சூச்சி அனுபவிக்கவுள்ளார்.

தண்டனைக் காலத்தையும் தலைநகர் நய்பிடாவில் வீட்டுக் காவலில் ஆங் சான் சூகி அனுபவிக்கவுள்ளார் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலையில், மியான்மர் மனித உரிமை கண்காணிப்பகம் சூச்சிக்கு எதிரான இந்த சட்ட நடவடிக்கைகளை விமர்சித்துள்ளது. மேலும், இது ஜனநாயகத்துக்கு எதிரான செயல், மியன்மர் ராணுவத்தால் சூச்சி பழிவாங்கப்படுகிறார்.

Join Our WhatsApp Group