நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய 3 அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து – வங்காளதேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. வங்காளதேச அணியின் பந்து வீச்சை நியூசிலாந்து வீரர்கள் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடித்து ரன்களை குவித்தனர்.
இறுதியில் 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கான்வே 64 ரன்களும், பிலிப்ஸ் 60 ரன்களும் அடித்தனர். இதையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி களம் இறங்கியது. அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷாண்டோ, லிட்டன் தாஸ் ஆகியோர் களம் இறங்கினர். ஆனால் அந்த அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தது.
இறுதியில் அந்த அணி 20 ஒவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஷகிப் அல் ஹசன் 70 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து அணி தரப்பில் மில்னே 3 விக்கெட்டும், பிரேஸ்வெல், சவுதி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் நியூசிலாந்து அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் நாளை பாகிஸ்தான் – வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. அதன் பின்னர் 14ந் தேதி நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.