மினுவாங்கொடை முக்கொலை; பிரதான சந்தேகநபரை தேடும் பொலிஸார்.

27
  • தகவல் தெரிந்தால் அழைக்க: 0718591608, 0718591610, 0718591612

மினுவாங்கொடை, கமன்கெதர பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் பிரதான சந்தேகநபரை கைது செய்ய, பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். இலக்கம் 10, மஹிந்தராம வீதி, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே எனும் முகவரியில் வசிக்கும், ஜயகொடகே சஞ்சீவ தோன சஞ்சீவ லக்மால் (833214292V) எனும் 39 வயதான சந்தேகநபரையே பொலிஸார் தேடி வருகின்றனர்.

கடந்த வியாழக்கிழமை (06) இடம்பெற்ற இச்சம்பவத்தை தொடர்ந்து, குறித்த சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேகநபர்களும் கடந்த சனிக்கிழமை (08) நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு ஒக்டோபர் 21ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கம்பஹா – 0718591608

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கம்பஹா – 0718591610

மினுவாங்கொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி – 0718591612

பின்னணி, கடந்த வியாழக்கிழமை (06) 7.00 மணியளவில் மினுவாங்கொடை, கமன்கெதர பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை (51) மற்றும் இரு மகன்கள் (24,23) உயிரிழந்திருந்தனர்.

பட்டம் விடும் நிகழ்வொன்றில் ஏற்பட்ட மோதலில் ஏற்பட்ட கொலையைத் தொடர்ந்து, மரணமடைந்தவர்கள் கொலைக் குற்றத்திற்காக சிறைவைக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்னர் சிறையிலிருந்து பிணையில் விடுதலை பெற்றிருந்தனர்.
உயிரிழந்தவர்களின் வீட்டிற்கு கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பொலிஸ் சீருடையில் வந்த சந்தேகநபர்கள், உயிரிழந்த இளைஞர்களின் தாயையும் சகோதரியையும் வீட்டிலிருந்து வௌியில் செல்லுமாறு தெரிவித்த பின், T56 வகை துப்பாக்கி மூலம் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அன்றையதினம் 3 சந்தேகநபர்களும் அதற்கு அடுத்த தினத்தில் மேலும் 3 சந்தேகநபர்களுமென பொலிஸாரால் 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். கொலைக் குற்றத்திற்கு சந்தேநபர் ஒருவர் பயன்படுத்திய பாதணிகள், பொலிஸ் சீருடைக்கு ஒத்த ஆடை, 02 கத்திகள் என்பன கட்டான வீதியின் தாகொன்ன பகுதியிலுள்ள தென்னை காணி ஒன்றிலிருந்து மீட்கப்பட்டிருந்ததாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்

Join Our WhatsApp Group