பாகிஸ்தான் வெள்ள நிவாரண நிதியுதவியில் ஊழல்; அமெரிக்கா கடுங்கோபம்.

42

வாஷிங்டன்: பாகிஸ்தானில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெருவெள்ளத்திற்கு 1,700 பேர் உயிரிழந்தும், 12,800 பேர் வரை காயமடைந்தும் உள்ளனர். தவிர 20 லட்சம் வீடுகள் சேதமடைந்தோ அல்லது முற்றிலும் அழிந்தோ உள்ளன. 79 லட்சம் பேர் வீடுகளை விட்டு புலம்பெயர்ந்து சென்று உள்ளனர். 5.98 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 25,100 பள்ளிகள் சேதமடைந்து உள்ளன. 7 ஆயிரம் பள்ளிகள் நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டு உள்ளன.

நெருக்கடியான சூழலில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானுக்கு உதவிடும் நோக்கில் அமெரிக்கா, நிதியுதவி அளிக்க முன்வந்தது. இதன்படி, வெள்ள நிவாரணம் மற்றும் மனிதநேய உதவி என்ற அடிப்படையில் அந்நாட்டுக்கு அமெரிக்கா ரூ.4,600 கோடி நிதியுதவி வழங்கியது. இதுபோக, உணவு பாதுகாப்பு உதவியாக ரூ.82 கோடி வழங்கியது. இந்நிலையில், பாகிஸ்தான் வெள்ள நிவாரண நிதிக்கு அளித்த தொகையில் ஊழல் நடந்துள்ளது என்று வெளியான தகவல் அமெரிக்காவை ஆத்திரமடைய செய்துள்ளது.

இதுபற்றி அமெரிக்க வெளியுறவு துறையின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைசிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பிரைஸ், இதனை நாங்கள் தீவிர கவனத்தில் கொண்டுள்ளோம். பாகிஸ்தானில் மட்டுமின்றி உலகின் எந்த பகுதியிலும், மனிதநேயம் சார்ந்த அவசர சூழலில் அமெரிக்காவின் வரிசெலுத்துவோரின் பணம் பயன்படுத்தப்படுகிறது.

அதனால் தொடர்ந்து, நிதி சரியாக நிர்வகிப்பது, மக்களை சென்று சேர்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளை கண்காணிக்க அமெரிக்க குழு உள்ளூர் அமைப்புகளுடன் சேர்ந்து பணியாற்றும் என கூறிய அவர், இந்த குழு மற்றும் அதன் உறுப்பினர்கள், வெள்ளம் பாதித்த சிந்த் மற்றும் பலூசிஸ்தான் மாகாணங்களில் உள்ள 10-க்கும் கூடுதலான மாவட்டங்களுக்கு நேரில் சென்று சுற்றி பார்வையிட்டு நிலைமையை ஆய்வு செய்து உள்ளது என்றும் கூறியுள்ளார்.

Join Our WhatsApp Group