காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது….? : உண்மையை கூறிய பின் நஷ்ட ஈடு பற்றி பேசுங்கள் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

0
33

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை கூறிய பின்னர் நஷ்ட ஈடு பற்றி கதையுங்கள் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் (11.10.2022) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நஷ்ட ஈட்டை 2 இலட்ச ரூபாயாக அதிகரிப்பது என்பது உறவுகளை ஏமாற்றும் செயல். முன்னர் ஒரு இலட்ச ரூபாயினை நஷ்ட ஈடாக வழங்கினார்கள். தற்போதைய நாட்டின் பணவீக்கம் காரணமாக ஒரு இலட்சம் ரூபாய் என்பது 25 ஆயிரம் ரூபாய் பெறுமதிக்கே சமனானது.

அந்த நிலையில் தற்போது 2 இலட்ச ரூபாய் என்பது 50 ஆயிரம் ரூபாய் பெறுமதிக்கே சமனாது. ஆகவே தொகையை அதிகரித்து வழங்குவது போல காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை மீண்டும் ஏமாற்ற முனைகிறார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் சட்ட ரீதியாக திட்டவட்டமாக கூற முடியாத நிலையில் உள்ளனர். இந்த நிலையில் தான் காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறிய சர்வதேச பொறிமுறை தேவை என உறவுகள் போராடி வருகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை கூறிய பின்னரே நஷ்ட ஈடு பற்றி கதைக்க முடியும்.

ஆனால் அவை பற்றி பேச அரசாங்கம் தயார் இல்லை. ஏனெனில் அது தொடர்பில் பேசினால் இராணுவம் உள்ளிட்ட பல தரப்பினர் குற்றவாளிகள் ஆக வேண்டிய நிலைமை ஏற்படும். அதனாலயே அவை தொடர்பில் பேசாது நஷ்ட ஈடுகளை வழங்குவது தொடர்பில் பேசி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை ஏமாற்ற முனைகிறார்கள் என மேலும் தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்