வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்ற நட்சத்திரங்கள்.

53

நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதாக வெளியான தகவல் சமூக வலைத்தளத்தில் விவாதத்தை கிளப்பியதோடு சிலர் அவரது முடிவை ஆதரித்தும், இன்னும் சிலர் எதிர்த்தும் கருத்துகள் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்வது என்பது திரையுலகில் புதிய விஷயம் இல்லை.

கடந்த காலங்களில் நட்சத்திர தம்பதிகள் பலர் இந்த முறையில் குழந்தை பெற்று இருக்கிறார்கள். பிரபல இந்தி நட்சத்திர தம்பதிகளான அமீர்கான்-கிரண் ராவ் 2011-ல் வாடகைத்தாய் மூலம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தனர். அந்த குழந்தைக்கு ஆசாத் ராவ் கான் என்று பெயர் சூட்டினர். இந்தி நடிகர் ஷாருக்கானும், அவரது மனைவி கவுரி கானும் 2013-ல் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தனர்.

அந்த குழந்தைதான் ஷாருக்கானின் இளைய மகன் அப்ராம்கான் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் கவர்ச்சியாக நடித்து பிரபலமான சன்னி லியோன் மற்றும் அவரது கணவர் டேனியல் வைபர் தம்பதிக்கும் வாடகைத்தாய் மூலம் ஆஷர், நோவா ஆகிய இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி, தொழில் அதிபர் ராஜ்குந்த்ரா தம்பதிக்கு ஏற்கனவே முதல் குழந்தை இருந்த நிலையில் இரண்டாவதாக சமிஷா என்ற பெண் குழந்தையை 2020-ம் ஆண்டு வாடகைத்தாய் மூலமாக பெற்றெடுத்தனர்.

இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா-பாப் பாடகர் நிக் ஜோனஸ் தம்பதிக்கு சில மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையை வாடகைத்தாய் மூலம் பெற்றுக்கொண்டதாக தெரிவித்தனர். இந்தி நடிகர் சல்மான் கானின் சகோதரரும், நடிகருமான சொஹைல்-சீமா ஜோடி தனது மகன் யோகனை 2011-ல் வாடகைத்தாய் மூலம் பெற்றனர்.

பிரபல நடிகர் ஷ்ரேயாஸ்-தீப்தி ஜோடி வாடகைத்தாய் மூலம் 2017-ல் மகள் ஆத்யாவுக்கு பெற்றோரானார்கள். நடிகை பிரீத்தி ஜிந்தா-ஜென் ஜோடி 2021-ல் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனதாக அறிவித்தனர்.

Join Our WhatsApp Group