கனவரெல்ல தோட்ட தொழிலாளியின் மரணத்திற்கு ஒருகோடியே 2 இலட்சம் ரூபா நட்டஈடாக வழங்க வேண்டும் என்பதுடன் தோட்ட முகாமையாளர் மற்றும் தொழிற்சாலை அதிகாரி உடனடியாக இடமாற்றம் செய்யப்பட வேண்டுமென இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் நிர்வாகத்துக்கு உறுதியாக கூறியுளார்.
அத்துடன் இந்த நிபந்தனைகளுக்கு நிர்வாகம் இணங்காவிடின் கொழும்பில் உள்ள நமுனுகல பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைமை காரியாலயத்திற்கு முன் தொழிலாளியின் பூதவுடலை வைத்து போராட்டம் செய்யவும் தயாராக உள்ளோமெனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் குடும்பத்தினர் எடுக்கும் சட்ட நடவடிக்கைக்கு முழு உறுதுணையாக இ.தொ.கா முன்நிற்கும் எனவும் தெரிவித்தார்.
கனவரெல்ல தோட்டத்தில் தோட்ட நிர்வாகத்தின் சொந்த வேலைக்காக அமர்த்தப்பட்ட தோட்டத் தொழிலாளி மரணமடைந்தமைக்கு நியாயமான தீர்வை வழங்குவது தொடர்பில் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் கனவரெல்ல தோட்ட நிர்வாகத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதன்போது உயிரிழந்த தொழிலாளியின் மரண சடங்குகளுக்கான முழுமையான செலவை மாத்திரமே தாம் பெறுப்பேற்பதாக தோட்டம் நிர்வாகம் தெரிவித்தற்கு கடுமையான எதிர்ப்பை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் வெளிப்படுத்தினார்.
இளைஞனின் மரணத்திற்கு நட்டஈடு வழங்கப்படாத பட்சத்தில் பூதவுடல் தொழிற்சாலையிலே வைக்கப்படும் என எச்சரித்தார்.அதனை தொடர்ந்து உயிரிழந்த குடும்பத்துக்கு 15 இலட்சம் நஷ்டஈடாக வழங்க நிர்வாகம் முன்வந்தது.அவ்முன்வந்த தொகை போதுமானதல்ல என்றும், 21 வயதுடைய தொழிலாளியே உயிரிழந்துள்ளார்.
அவர் தோட்டத்தில் மேலும் 34 வருடங்களுக்குமேல் பணிபுரிவதற்கான சூழ்நிலை இருந்த போது, தற்போது வழங்கப்படும் 1000 சம்பளத்தின் பிரகாரம் கணக்கிட்டால் ஒரு கோடியே 2 இலட்சம் ரூபா நட்டஈட்டை வழங்கவேண்டும் என செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
ஆகவே நியாயமான நட்டஈட்டை வழங்க வேண்டும் என்பதுடன் மரணத்துக்கு பொறுப்புக்கூற வேண்டிய தோட்ட முகாமையாளர் மற்றும் தொழிற்சாலை அதிகாரி உடனடியாக இடமாற்றம் செய்யப்பட வேண்டும்.
இந்த கோரிக்கைகளுக்கு நிர்வாகம் இணங்காவிடின் கொழும்பில் உள்ள நமுனுகல பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைமை காரியலயத்துக்கு முன் பூதவுடலை வைத்து போராட்டம் செய்யவும் தயங்கமாட்டோமென கடுமையாக எச்சரித்தார்.