கஜீமாவத்தை தீ: உண்மையை கண்டறியும் குழுவினது அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு

14

மோதரை கஜீமாவத்தை வீடுகளையண்டிய பிரதேசத்தில் அடிக்கடி தீவிபத்து ஏற்படுவதற்கான காரணத்தை அறிவதற்கு நியமிக்கப்பட்ட பிரதமர் குழுவின் அவதானிப்புக்கள் மற்றும் சிபாரிசுகளடங்கிய அறிக்கையானது, கொழும்பு பிரதமர் அலுவலகத்தில் 2022.10.10 ஆந் திகதியன்று பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

குழுவின் சம தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் மேஜர் பிரதீப் உதுகொட அவர்களும் கொழும்பு மாவட்டச் செயலாளர் பிரதீப் யசரத்ன அவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். மோதரை கஜீமாவத்தை தோட்ட வீடுகளையண்டிய பகுதியில் கடந்த ஒன்றரை வருடங்களுக்குள் மூன்று தீவிபத்து சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன் இதன்போது அதிகளவான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர். கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் கவனம் செலுத்திய பிரதமர் அந்த வீடுகளையண்டியதாக தீவிபத்துகள் ஏற்பட்டதற்கான காரணங்கள் மற்றும் அங்கு வசிக்கின்றவர்கள் தொடர்பில் விசாரித்தறிவதற்கு இந்தக் குழுவினை நியமித்தார்.

அந்தக் குழுவின் தலைவர்களாக கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் மேஜர் பிரதீப் உதுகொட மற்றும் கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன செயற்பட்டதுடன், கொழும்பு நகர ஆணையாளர், அரச இரசாயன பகுப்பாய்வாளர், பொலிஸ் அத்தியட்சகர், கொழும்பு பிரதேச செயலாளர், கிராம அலுவலர் மற்றும் இடர் முகாமைத்துவ நிலையம், நகர அபிவிருத்தி அதிகாரசபை, வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் உரிய அனைத்து தரப்பினரும் குழுவின் அங்கத்தவர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.

கடந்த வாரத்தில் கூடிய இக்குழுவானது வீடுகளது உரிமைகள், பயன்பாடுகள், வசிப்பவர்கள் அங்கு வந்த விதம், இது தொடர்பில் எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் கடந்த காலங்களில் தீவிபத்து ஏற்படுவதற்கான காரணங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதுடன், அதனடிப்படையில் தயாரிக்கப்பட்ட அவதானிப்புக்கள் மற்றும் விதப்புரைகளடங்கிய இறுதி அறிக்கையை பிரதமரிடம் கையளித்தனர்.

Join Our WhatsApp Group