உக்ரைன் விவகாரம்: ஐ.நாவில் ரஷ்யாவின் ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கை நிராகரிப்பு.

26

நியூயார்க்: உக்ரைனின் 4 பிராந்தியங்களை இணைந்ததைக் கண்டிக்கும் தீர்மானத்துக்கு எதிராக ரஷ்யாவின் கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபை நிராகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன்மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுதம் மற்றும் நிதி உதவி செய்து வருகின்றன. 6 மாதங்களைத் தாண்டி போர் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, போர் மூலம் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட உக்ரைனின் லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய நகரங்களை தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொள்ள ரஷ்யா திட்டமிட்டது. இது தொடர்பாக அப்பகுதியில் ரஷ்ய அதிகாரிகள் பொது வாக்கெடுப்பையும் நடத்தினர். உக்ரைனில் நான்கு பிராந்தியங்களை மாஸ்கோ இணைத்ததைக் கண்டித்து ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட திட்டமிடப்பட்டு இருந்தது. ரஷ்யாவை கண்டிக்கும் இந்த தீர்மானம் புதன்கிழமை நடக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், உக்ரைனில் நான்கு பிராந்தியங்களை மாஸ்கோ இணைத்ததைக் கண்டிக்கும் தீர்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ரஷ்யா ஐக்கிய நாடுகள் சபையில் கோரிக்கை வைத்தது. இந்த நிலையில் ரஷ்யாவின் கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபை நிராகரித்துள்ளது.

ஐ.நா. பொதுச் சபையில் ரஷ்யா ரகசிய வாக்கெடுப்பை கோரியதற்கு இந்தியா உட்பட 107 உறுப்பினர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. ரஷ்யாவின் கோரிக்கைக்கு ஆதரவாக 13 நாடுகள் மட்டுமே வாக்களித்தன,மீதமுள்ள 39 நாடுகள் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Group