‘விஜய் – அஜித் ஒப்புக்கொண்டால் படம் தயார்’ – வெங்கட்பிரபு

47

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான விஜய் – அஜித் இருவரும் 1995-ம் ஆண்டு வெளியான ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இவர்கள் மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும் என்பதே தமிழ் சினிமாவின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

இதற்காக தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவோரில் மிக முக்கியமானவர், இயக்குனர் வெங்கட் பிரபு. ‘மங்காத்தா’ படத்தை இயக்கியதில் இருந்தே விஜய் – அஜித் கூட்டணியில் படம் எடுத்து விடவேண்டும் என்று விடாமுயற்சியுடன் காத்திருக்கிறார்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வெங்கட்பிரபுவிடம், ‘மங்காத்தா படத்தின் 2-ம் பாகம் எப்போது வெளியாகும்? விஜய் – அஜித் கூட்டணியை அதில் பார்க்க முடியுமா?’ என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்து பேசிய வெங்கட்பிரபு, “எனக்கும் அவர்கள் இருவரையும் இணைத்து திரையில் காட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதை அவர்களிடம் பலமுறை கூறி இருக்கிறேன். அவர்களுக்கும் அந்த ஆசை இருக்கிறது. ஆனால் அதற்கான காலம் அமையவேண்டும். அது எப்போது நிறைவேறும்? என்பதற்காக நான் ஆசையுடன் காத்திருக்கிறேன். அவர்கள் ஒப்புக்கொண்டால் ‘மங்காத்தா-2’ படத்தை பெரிய அளவில் எடுத்து விடலாம்” என்றார். வெங்கட்பிரபுவின் கனவு பலிக்குமா? காலம் கனியுமா?

Join Our WhatsApp Group