பாராளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதியின் அலுவலகத்தில் ஜனாதிபதிக்கும் மொட்டு கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் கடும் காரசாரமாக இருந்ததாக தெரிய வருகிறது. அமைச்சரவை அமைச்சர்களை நியமிப்பது தொடர்பில் இந்தக் கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையில் இன்று பிற்பகல் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
விசேட அறிக்கையொன்றை வெளியிடுவதற்காக ஜனாதிபதி இன்று நாடாளுமன்றத்திற்கு வந்திருந்த போதே குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இக்கலந்துரையாடலுக்கு பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களான எஸ்.பி. திஸாநாயக்க, ரோஹித அபேகுணவர்தன உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், இந்தக் குழு இந்தக் கலந்துரையாடலுக்காக நாடாளுமன்றத்தின் ஜனாதிபதி அலுவலகத்திற்கு வந்தபோது, அமைச்சர் பந்துல குணவர்தன ஜனாதிபதியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததாக அறியமுடிகிறது.
இங்கு அமைச்சர் பந்துல குணவர்தன இல்லாமல் ஜனாதிபதியுடன் கலந்துரையாட வேண்டும் என குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி, ஜனாதிபதியின் அறையிலிருந்து பந்துல குணவர்தன வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் தொடங்கிய கலந்துரையாடலில் ஜனாதிபதியை நியமிப்பதில் பொதுஜன பெரமுனவின் எம்.பி.க்கள் பலமான அர்ப்பணிப்பை மேற்கொண்டதாக தெரிவித்த எஸ்.பி திஸாநாயக்க, இருப்பினும் அவர்களுக்கு அமைச்சரவை அமைச்சர் பதவிகள் ஏன் வழங்கப்படவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, ஐக்கிய மக்கள் சக்தியின் 5 எம்.பி.க்கள் அமைச்சரவையில் இணைவதற்கு தயாராக இருப்பதால் அமைச்சரவை நியமனம் தாமதமாகியுள்ளதாக தெரிவித்தார்.
ஜனாதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளப் போவதில்லை என தெரிவித்துள்ளனர்.
எனவே, பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய அமைச்சரவையை உடனடியாக நியமிக்குமாறு திஸாநாயக்க உள்ளிட்ட மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.