துல்லியமான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்க பொறுப்புடன் செயற்படுங்கள் – ஊடகச் செயலர்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை!

41

தற்போதைய சவாலில் இருந்து நாட்டை மீட்டெடுக்க நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் எனவும், அதற்கு துல்லியமான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது அவசியம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரவித்தார். 
 
பிரசாரம் இன்றி எதனையும் சாதிக்க முடியாது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை தாமதமின்றி மக்களுக்கு கொண்டு சேர்க்க அர்ப்பணிப்புடன் செயற்படுமாறும், அனைத்து ஊடக செயலாளர்களிடமும்  கோரிக்கை விடுத்தார்.
 
அரச தொடர்பாடல் பொறிமுறை தொடர்பில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்கள் ஆகியோரின் ஊடக செயலாளர்களை தெளிவுபடுத்தும்   செயலமர்வு இன்று (07) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இந்த  நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
ஜனாதிபதி முன்னறிவிப்பு இன்றி, திடீரென  இந்த நிகழ்வில் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும். அரசாங்கத்தின் அபிவிருத்தி மற்றும் கொள்கைத் திட்டங்களை  மக்களிடம் கொண்டு செல்வது அமைச்சின் ஊடகச் செயலாளர்களுக்கு இருக்கும் பிரதான பொறுப்பாகும். எனவே, அரச தகவல் தொடர்புப் பொறிமுறையை வலுவாகப் பேணுவதற்கு அரசாங்கத் தகவல் திணைக்களம், ஜனாதிபதி ஊடகப் பிரிவு மற்றும் அமைச்சுக்களுக்கு இடையில் சிறந்த ஒருங்கிணைப்பு பேணப்பட வேண்டியதன்   முக்கியத்துவம் குறித்து இச்செயலமர்வில் ஊடகச் செயலாளர்களுக்கு  தெளிவுபடுத்தப்பட்டது.
 
இந்த நிகழ்வில் மேலும் கருத்து தெரிவித்த  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள்,
 நாம் வெளியிடும் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அரசாங்கம் முன்னெடுக்கும் பணிகளை  நாட்டுக்கு எடுத்துக் கூற வேண்டும்.  நாங்கள் மிகவும் கடினமான காலப்பகுதியில் இருக்கிறோம். 20ஆம் நூற்றாண்டிலோ அதற்கு முன்னரோ இப்படியொரு நிலைமையை நாடு எதிர்கொண்டதில்லை. இதிலிருந்து நாம் வெளியேற வேண்டும். பெரும்பாலான மக்கள்  நம்பிக்கை இழந்துள்ளனர். அந்த நிலைமையை நாம் சீர்செய்ய வேண்டும். அரசின் வேலைத்திட்டம் என்ன என்பதை  மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
 
நாட்டில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் நாம் அவதானமாக இருக்கிறோம்.   அனைத்துப்  பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியாவிட்டாலும், அவற்றைப் பற்றி நாங்கள் அறிந்து வைத்திருக்கிறோம். இது தொடர்பில்  மக்களுக்கு தகவல் வழங்க   வேண்டும்.
 
அரசாங்கம் என்ன செய்கிறது என்பதை அனைவரும் அறிய வேண்டும். தவறுகள் இருப்பின் திருத்திக்கொள்ள வேண்டும். இந்த இக்கட்டான காலத்திலிருந்து நாம் மீள வேண்டும். நாட்டில் ஸ்திரமற்றத்தன்மை காணப்பட்டால், மீள முடியாது. நாட்டில் ஸ்திரத்தன்மை இருக்க வேண்டும். அந்த ஸ்திரத்தன்மையை உருவாக்க சரியான தகவல்களை வழங்குவது அவசியம்.
 
இலத்திரனியல் ஊடகங்களினாலோ அச்சு  ஊடகங்களினாலோ அன்றி சமூக ஊடகங்களினால்  தான் இன்று பிரச்சினை உருவாகியுள்ளது. அவற்றில் நல்லது கெட்டது இரண்டும் உண்டு. இது முழு உலகத்திலும் எதிர்கொள்ளப்படும் பிரச்சினையாகும். குறிப்பாக தற்போதைய நிலையில் இவற்றினால் எமக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே நீங்கள் அனைவரும் உங்களின் பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டும்.
 
நீங்கள் உங்கள் பொறுப்பை சரியாக நிறைவேற்றாவிட்டால் முழு நாடும் மேலும் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.  இந்த செயலமர்விற்கு அனைத்து ஊடகச் செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டாலும் 83 வீதமானவர்கள் மாத்திரமே வருகை தந்துள்ளனர்.   யார் வரவில்லை என்பதை கண்டறிய வேண்டும். ஏனென்றால் இவர்களுக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது. ஊடகங்களுக்கு  எப்படி தகவல்களை விளக்குவது, தவறான கருத்துக்களை எவ்வாறு  சரி  செய்வது என்பது தொடர்பில் பரந்தளவில் பிரசாரம் முன்னெடுக்க வேண்டியுள்ளது. பிரசாரம்  இல்லாமல் எதுவும் வெற்றியடையாது.
 
நாட்டின்  75ஆவது சுதந்திரத்திர தின விழா அடுத்த ஆண்டு கொண்டாடப்பட உள்ளது.  முன்னாள் சபாநாயகரின் யோசனையின்படி, அடுத்த வாரம் முதல்  மக்கள் சபைகள் உருவாக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட இருக்கிறது.   இவ்வாறு  பாரிய செயல்திட்டங்கள் இருக்கின்றன. அவை தொடர்பில் பரந்தளவிலான  பிரசாரங்களை முன்னெடுக்கவே    இதுபோன்ற செயலமர்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
 
03 மாதங்களுக்கு ஒருமுறை இவ்வாறான செயலமர்வுகளை ஒழுங்கு செய்ய வேண்டும். அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்னவின் வழிகாட்டலின் கீழ் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஊடக ஆலோசகர் பேராசிரியர் சுனந்த மத்தும பண்டார, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் தனுஷ்க ராமநாயக்க, சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் சட்டத்தரணி சுதர்சன குணவர்தன, லங்காதீப பிரதம ஆசிரியர் சிரி ரணசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
 

Join Our WhatsApp Group