நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம் : தாய்லாந்து துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் உள்பட 34 பேர் பலி

0
15

பேங்க்காக்: தாய்லாந்தில் குழந்தைகள் காப்பகம் ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் உள்பட 34 பேர் உயிரிழந்தனர்.
நெஞ்சை உலுக்கும் இந்த துயரச் சம்பவம், தாய்லாந்தின் வட கிழக்கு மாகாணமான நாங் புவா லாம்புவின் தலைநகரில் நிகழ்ந்துள்ளது.

காவல்துறையைச் சேர்ந்த முன்னாள் காவலரான பன்யா கம்ராப் என்பவர், குழந்தைகள் காப்பகத்திற்குள் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தியும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதில், 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். பெரியவர்கள் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இறுதியில், தாக்குதலில் ஈடுபட்ட பன்யா கம்ராப்பும் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

தாய்லாந்து போலீஸார் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். தாக்குதல் குறித்த தகவல் கிடைத்ததும் தாங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்ததாகவும், எனினும் அதற்கு முன்பாக பன்யா கம்ராப் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ள போலீஸார், இந்த தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.

துப்பாக்கி உரிமம் பெற தாய்லாந்தில் கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. அண்டை நாடுகளைக் காட்டிலும் தாய்லாந்தில் கட்டுப்பாடுகள் அதிகம் என்பதால், சட்டவிரோதமாக துப்பாக்கிகள் அதிக அளவில் புழக்கத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இது போன்று பெரும் எண்ணிக்கையில் துப்பாக்கிச்சூடு நடைபெறுவது தாய்லாந்தில் அரிது என்ற போதிலும், கடந்த 2020ல் சொத்து தகராறில் ராணுவ வீரர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 29 பேர் உயிரிழந்தனர் என்பதும் 57 பேர் காயமடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்