ரஷியாவின் போர் தாக்குதலுக்கு மத்தியில் உக்ரைன் அதிபருடன் மோடி போனில் பேச்சு.

10

கிவ்: உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 7½ மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. தற்போது கிழக்கு உக்ரைன் பகுதியில் ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. போரில் கைப்பற்றிய உக்ரைனின் நான்கு பிராந்தி யங்களை ரஷியா தன் நாட்டுடன் இணைப்பதாக அறிவித்தது.

ரஷியா-உக்ரைன் இடையேயான போரை நிறுத்தும்படியும், பேச்சு வார்த்தையில் ஈடுபடுமாறும் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. சமீபத்தில் உஸ்பெகிஸ்தானில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் ரஷியா அதிபர் புதினிடம், போரை முடிவுக்கு கொண்டுவர இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தினார். இதற்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் பாராட்டுக்கள் தெரிவித்தன.

இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி தொலை பேசியில் பேசினார். உக்ரைன்-ரஷியா இடையேயான போர் நிலவரம் குறித்து மோடி பேச்சு வார்த்தை நடத்தினார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “பிரதமர் மோடி, உக்ரைன் அதிபருடன் தொலைபேசியில் பேசினார்.

அப்போது பகைமையை முன்கூட்டியே நிறுத்தி விட்டு பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியிலான பாதையை தொடர வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தினார். ராணுவம் மூலமான தீர்வு எதுவும் இருக்க முடியாது என்று அவர் தனது உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தினார். எந்தவொரு அமைதி முயற்சிகளுக்கும் இந்தியா பங்களிக்கும்.

உக்ரைனில் உள்ள அணுசக்தி நிலையங்களுக்கு ஆபத்து ஏற்படுவது பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு நீண்டகால பேரழிவை ஏற்படுத்தி விடும் என்று தெரிவித்தார். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் அதிபர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், இந்திய பிரதமருடன், உக்ரைன் பகுதிகளில் ரஷியா வாக்கெடுப்பு நடத்தியது பற்றி அதிபர் ஜெலன்ஸ்கி விவாதித்தார்.

உக்ரைனின் பிராந்தி யங்களை சட்ட விரோதமாக இணைக்க முயற்சிக்கும் ரஷியாவின் முடிவுகள் யதார்த்தத்தை மாற்றாது என்று தெரிவித்துள்ளது.

Join Our WhatsApp Group