முல்லைத்தீவில் பதற்றம்! வீதித்தடை உடைப்பு – போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் 

32

முல்லைத்தீவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கடற்தொழிலாளர்களுக்கு எதிராக மற்றுமொரு கடற்தொழிலாளர்கள் அடங்கிய குழுவொன்று போராட்டம் முன்னெடுத்துள்ள நிலையில் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலக பகுதியில் போராட்டம்: முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தை முற்றுகையிட்டு தமக்கான தீர்வு கிடைக்கும் வரை முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள் குழுவொன்று இன்று (05.10.2022) மூன்றாவது நாளாக போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

கடற்தொழில் நீரில்வள திணைக்களத்தின் நுழைவாயிலுக்கு அருகில் கொட்டகை அமைத்து குறித்த போராட்டக்காரர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணை போகும் அதிகாரிகளை மாற்றுமாறு கோரியும், சுருக்குவலை மற்றும் வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல் போன்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் இன்று தமக்கு தீர்வு கிடைக்கவில்லை என தெரிவித்து ஆத்திரமடைந்து கடற்தொழிலாளர்கள் தமது படகுகள் வலைகளுக்கு தீவைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு மீன்பிடி படகு மற்றும் வலைகள் என்பன தீயில் முற்றாக எரிந்த நிலையில் மேலும் படகுகள் மீது தீ பரவாமல் பொலிஸார் கடற்தொழிலாளர்களை தடுத்துள்ளனர்.

மற்றுமொரு குழுவினர் போராட்டம்: இந்நிலையில் குறித்த கடற்தொழிலாளர்களுக்கு எதிராக முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய், சாலை பகுதிகளில் தென்பகுதியில் இருந்து வருகை தந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற மீனவர்கள் சுமார் 300 பேரளவில் முல்லைத்தீவு பேருந்து நிலையம் அருகே காலை 11 மணியளவில் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதனையடுத்து குறித்த கடற்தொழிலாளர்கள் மற்றும் ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற கடற்தொழிலாளர்கள் இடையே முரண்பாடுகள் ஏற்படலாம் என்ற சந்தேகத்தில் பொலிஸார், முல்லைத்தீவு கடற்கரை வீதியில் இலங்கை வங்கிக்கு முன்பாக ஒரு வீதித்தடையும் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் கடற்தொழிலாளர்கள் மற்றைய போராட்ட குழுவை நோக்கி வரமுடியாத வகையில் இன்னுமொரு வீதித் தடையையும் இன்று காலைமுதல் ஏற்படுத்தியிருந்தனர்.

எனினும் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் கடற்தொழிலாளர்களுக்கு எதிரான போராட்டக்காரர்கள் இலங்கை வங்கி முன்பாக பொலிஸார் அமைத்த வீதித்தடையை உடைத்து கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகம் நோக்கி சென்று அங்கிருந்த போராட்டக்காரர்களை தாக்க முற்பட்டபோது பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் கண்ணீர் புகை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Join Our WhatsApp Group