** கவனத்தில் கொள்ளப்படும் என்கிறார் அமைச்சர் ரமேஷ் பத்திரன
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தீபாவளி முற்பணத்தை 15,000 ரூபா வரை அதிகரிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரியுள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அவர் இதனை தெரிவித்தார்.
“கடந்த காலங்களில், பெரும்பாலான பெருந்தோட்ட நிறுவனங்களால் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 5,000 ரூபா வழங்கப்பட்டுவந்தது.
எனினும், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தீபாவளி பண்டிகையை கொண்டாட அந்தத் தொகை போதுமானதல்ல.
எனவே, எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் தீபாவளி முற்பணத்தை 15,000 ரூபா வரை அதிகரிப்பது பொருத்தமாக இருக்கும்” என தான் பரிந்துரைப்பதாக சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
இவ்வாறு வழங்கப்படுவது கடன் என்பதால் தேயிலை சபை ஊடாக தலையிட்டு அரசாங்கம் இந்த முற்பணத்தை வழங்க முடியும் என்றார். இதற்கு பதிலளித்த பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன, இது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதுடன், கடன்களை வழங்க ஆவண செய்யுமாறு தேயிலை சபைக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.