மறைந்த நடிகர் தர்ஷன் தர்மராஜின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். இலங்கையின் பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜ் தமது 41 ஆவது வயதில் காலமானார். அன்னாரின் இறுதி கிரியைகள் எதிர்வரும் 5ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது பூதவுடன் தற்போது பொரளையில் தனியார் மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, இறக்குவானை பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட அவர், திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிட்னி சந்திரசேகர என்பவரினால் 2008 ஆம் ஆண்டு இயக்கப்பட்ட சிங்கள சின்னத்திரை நாடகமான ஏ9 மூலம் தர்ஷன் தர்மராஜ் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மறைந்த நடிகர் தர்ஷன் தர்மராஜின் பூதவுடலுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனும் இறுதி அஞ்சலி செலுத்தினார்.