இன்றைய நெருக்கடி நிலை தமிழருக்கு புதிதானதல்ல. அரசாங்கத்தின் அனுஷரணையுடன் நடந்த ஈவிரக்கமற்ற கொடூரமான பொருளாதார தடைகளால் இந்த மக்கள் அனுபவித்த துன்பங்கள் சொல்லி மாளாது.
30 ஆண்டுகால பொருளாதார தடை. இந்த மக்களை எப்படி வாட்டி இருக்கும்…? இதன் யதார்த்த நிலையை புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் இப்பொழுது இலங்கை மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
பெனடோல் தொடக்கம் பெண்களுக்கான ஆரோக்கிய துவாய்கள் வரை, சகலதையுமே தடுத்தார்கள். வாழுங்கள் அல்லது செத்து மடியுங்கள் என்ற அகந்தை தொணியில் தான், கொடூரமான பொருளாதார தடை விதிக்கப்பட்டது.
அரசாங்கத்தின் இந்த பொருளாதாரத் தடைக்கு தென்பகுதி சிங்கள மக்களும் முழுமையான ஆதரவாகவே இருந்தார்கள். இலட்சக்கணக்கான மக்கள் பட்டினியாலும் பசியாலும் போ ஷாக்கின்மையாலும் வாடிய நிலையிலும் கருணை காட்டப்படவே இல்லை.
தடைகளை, சவால்களாக எதிர்கொண்ட மக்கள் பீனீஸ்களாக மீண்டெழுந்தனர். மாற்று வழிகள் மூலம் முதுகெலும்புள்ள சமூகமாக புத்தெழுச்சி பெற்றனர் என்பதை வரலாற்று பாடமாக ஞாபகம் மூட்ட வேண்டியிருக்கிறது. இப்பொழுது முழு நாடும் எதிர்கொள்கின்ற பிரச்சனை, அப்போது வடக்கு, கிழக்கு மீதான பொருளாதாரத் தடைக்கு நிகராகவே இருக்கிறது.
இல்லை… இல்லை…. இல்லையெ ன்பதை தவிர நாட்டில் எதுவுமே இல்லை. தோல்வி அடைந்த நாடு என்ற உலக பட்டியலிலும் இலங்கை இடம் பிடித்து விட்டது.
பொருளாதார நெருக்கடி கட்டு மீறிய நிலையில் கொள்வனவு சக்தியை இழந்திருக்கின்ற மக்கள், பாரிய வரி விதிப்புக்களால், செய்வதறியாது விரத்தியின் விளிம்பிக்கு சென்று விட்டனர். ஆட்சியில் இருந்த மடையர் கூட்டத்தால் மக்களின் வாழ்வியலும் வாழ்க்கை முறையும் இப்போதும் முழுமையாகவே மாறிவிட்டன.
இந்த மோசமான நிலையிலும், அரசாங்கம் தனது இருப்பை காப்பாற்றும் ஆணவப் போக்கை கைவிட்டதாக இல்லை. கொழும்பு மாநகரம் முற்றாக அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டு இருக்கின்றன.
சிறு சிறு வலயங்கள் உருவாக்கப்பட்டது போல அரசாங்கம் காட்டிக்கொண்டாலும், ஒட்டு மொத்தத்தில் பார்க்கின்ற பொழுது கொழும்பு மாநகரின் முக்கிய பிரதேசங்களுக்குள் போக முடியாத நிலை தான் இருக்கின்றது. இரவோடு இரவாக இந்த உயிர் பாதுகாப்பு வலயம் பிரகடனம் செய்யப்பட்டதன் நோக்கம் என்ன? இது இப்போதும் மர்மமாகவே இருக்கின்றது.
ஏன் இந்த அவசர பிரகடனம்….? என்று கேட்டால் அரசிடம் உரிய பதில் இல்லை. நாட்டிலிருந்து ஜப்பானுக்கு புறப்படுவதற்கு சற்று நேரத்திற்கு முன்புதான் இந்த பிரகடனம் வெளியாகி இருக்கிறது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்த முடிவும் அறிவிப்பும் உலகம் முழுவதும் பெரும் எதிர்ப்பலையை உருவாக்கியது.
மக்களின் அமைதிப் போராட்டங்களை தடுக்கும் அரசாங்கத்தின் ஜனநாயக விரோத போக்கு என ஜெனீவாவில் உள்ள மனித உரிமை பேரவை கண்டனம் தெரிவித்தது. நேரம் காலம் தெரியாமல் மாட்டிக்கொண்ட இந்த அரசாங்கம், சர்வதேசத்தில் இருந்து எழுந்த எதிர்ப்புக் குரல்களால் திகைத்துப் போய் நின்றது.
உண்மையில், கொழும்பு மா நகரிலும் சுற்றுப்புறங்களிலும் மக்களின் சுதந்திரமான நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதும் அச்சுறுத்துவதும் தான் இந்தப் பிரகடனத்தின் மறைமுக இலக்காக இருக்கின்றது. அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு, மக்களின் தன்னெழுச்சி போராட்டம் ஒன்று வெடிப்பதற்கு எதிர்வு கூறலாகவே இருக்கிறது.
நாடு மோசமான நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், மக்கள் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் வெடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் அச்சமும் அரசாங்கத்திடம் இருக்கிறது. நலிந்து உடைந்து போய் கிடக்கும் மக்களை மேலும் பாதிப்புக்கு உள்ளாக்குவது தான் இந்த அரசின் இலக்காக இருக்கிறது.
அதேபோல, பாதுகாப்பு வலயத்தின் பிரகடனம் அழுத்தங்களை ஏற்படுத்தும் என்று அரசு கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இதனால், தட்டுத் தடுமாறிய நிலையில், ஏன் பிரகடனம் செய்தார்கள் என்பதற்கு விளக்கம் அளித்தார்கள். ஜனாதிபதி இல்லாத நிலையில் கொழும்பில் அவசர அவசரமாக செய்தியாளர் மாநாடு ஒன்று நடத்தப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டது.
பதில் பாதுகாப்பு அமைச்சரும், பாதுகாப்பு செயலாளரும் இந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு விளக்கம் அளித்தனர். ” நாம் அமைதி வழி போராட்டங்களுக்கு எந்த வகையிலும் தடை விதிக்கவில்லை. தாராளமாக ஊர்வலங்கள், போராட்டங்கள் நடத்தலாம். ஆனால் 6 மணித்தியாலங்களுக்கு முன்னர் போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும் ” என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்தின விளக்கம் அளித்தார். இந்த விளக்கங்கள் அழுத்தங்களால் வெளிப்பட்டவையாகவே பார்க்க முடிந்தது.
பசி பட்டினியால் வாடுகின்ற மக்கள் தன்னெழுச்சி போராட்டங்கள் நடத்துகின்ற பொழுதும், தடுத்து நிறுத்த முடியும் என்று அரசு நினைத்தால், அது அறியாமையின் வெளிப்பாடாகவே இருக்கும். மக்களின் உணர்வு பூர்வமான தன் எழுச்சி போராட்டம் சுனாமிக்கு ஒப்பானது. அத்தகைய போராட்டங்களை தடுத்து நிறுத்த முற்படுவது தற்கொலைக்கு சமமாக முடியும் என்பதை ஆட்சியாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆயுதமும் அடக்கு முறையும் நீடித்து நிலைக்காது என்பதற்கு கோட்டா பய ராஜபக்சவின் தப்பி ஓட்டம் நல்லதொரு படிப்பினையாகும்.
ஜனாதிபதி ரணில் எதனையும் செய்யக்கூடியவர் என்ற எதிர்பார்ப்பு வெற்றி அளிக்கவில்லை. முடிந்தவரை அவரும் அர்ப்பணிப்போடு முயல்கிறார். முடியாமலேயே இருக்கிறது. ராஜபக்ச குடும்பத்தினர் ஏற்படுத்திய பாதிப்பு ஈடு செய்ய முடியாததாகவே இருக்கிறது. கடன் வழங்க முன் வருகின்ற நாடுகள் கூட அச்சம் தெரிவிக்கின்றன.
வெளிநாடுகள் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையோடு ஆட்சி பொறுப்பை எடுத்துக் கொண்டவர் ரணில் விக்கிரமசிங்க. ஆனால், இன்னும் கை கூடாமல் இருக்கிறது. ஏதோ ஒரு வழியில் சமாளிப்பதற்காகவே வரி விதிப்புகளை கட்டாயமாக்கி இருக்கிறார். இந்த வரி விதிப்புக்களால் மக்கள் மிகவும் நொந்து போய் அழுத்தத்தின் விளிம்புக்கே சென்று இருக்கிறார்கள். இது எந்த வடிவில் போராட்டமாக வெடிக்கும் என்று கூற முடியாமல் உள்ளது.
வசந்த முதலிக்கே போன்ற மாணவ தலைவர்களை ஜனாதிபதியின் உத்தரவின் பெயரிலேயே கைது செய்து இருக்கிறார்கள். இதன் மூலம் போராட்டத்தை ஒடுக்கலாம் அல்லது நிறுத்தலாம் என்பது அவர்களுடைய நினைப்பு. அப்படி நினைத்துக் கொண்டால் அது அறியாமை என்று தான் சொல்ல வேண்டும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த விடயங்கள் தெரியாத ஒரு கத்துக் குட்டி அரசியல்வாதியல்ல. இதை உலகமும் நன்கு அறியும்.
ஆனால், இவர் மொட்டு கட்சியினதும் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினதும் அழுத்தங்களின் நிர்ப் பந்த அரசியலுக்குள் ரணில் சிக்கி இருப்பதனால், சுதந்திரமான நிறைவேற்று அதிகாரியாக அவரால் செயல்பட முடியாமல் திண்டாடுகிறார் என்பது தான் கவலைக்குரிய அரசியலாக இருக்கின்றது.
Ceylonsri – குணா