Saturday, 3 December, 2022
yaraglobal
Homeகட்டுரைஐ.நாவில் தமிழருக்கு ஏமாற்றம்: ஆறு தமிழ் கட்சிகள் அதிருப்தி!

ஐ.நாவில் தமிழருக்கு ஏமாற்றம்: ஆறு தமிழ் கட்சிகள் அதிருப்தி!

** சர்வதேசத்தை இனியும் நம்பி என்ன பயன்?; மாற்று வழிகளை பாருங்கள்….

ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடர் தொடங்கினால் இலங்கை அரசியலில் இரட்டிப்பு பதட்டம் ஏற்படுவது வழமை. உள்ளூர் விசாரணைகளில் நம்பிக்கை இல்லை ; சர்வதேச நீதியே வேண்டுமென்று தமிழ் கட்சிகள் அழுத்தமான கோரிக்கைகளை முன் வைப்பதும், அதற்கு பலம் சேர்க்கின்ற வகையிலே ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் முன்னெடுக்கப்படுவதும் புதிய விடயங்களாக பார்க்க முடியவில்லை.

இதற்கு எதிராக, இலங்கை அரசாங்கம் களமிறங்கி செயல்படுவதும், உலக நாடுகளிடம் ஆதரவு கோருவதும் காலம் காலமாக நடந்தே வருகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51வது கூட்டத்தொ டர் கடந்த 12 ஆம் தேதி ஆரம்பமாகியது. எதிர்வரும் ஏழாம் தேதி கூட்டத்தொடர் முடிவடைகிறது. இலங்கை தொடர்பாக, ஐநா மனித உரிமை பேரவையின் முன்னாள் ஆணையாளர் நாயகம் திருமதி பஜ்லெட் அம்மையார் இலங்கை தொடர்பாக வெளியிட்ட 17 பக்க அறிக்கை முதலில் எடுக்கப்பட்டது.

ஓகஸ்ட் மாதத்தில் பஜ்லெட் ஓய்வு பெற்றுச் சென்று விட்டார். அவருடைய அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு முதலாம் நாளன்று இலங்கை தொடர்பான விடயங்களை சுட்டிக்காட்டினார். உண்மை எங்கும் கசக்கும். அதுதான் உலக யதார்த்தம். பதில் ஆணையாளர் நாயகம்,இலங்கை தொடர்பாக கூறிய கருத்துக்களுக்கு வழமை போன்று இலங்கை அரசு கண்டனத்தை தெரிவித்தது.
மனித உரிமை பேரவை தனது அதிகாரத்துக்கு அப்பால் செயல்படுவதாக இலங்கை பகிரங்கமாக குற்றம் சாட்டி இருக்கிறது. உலக நடப்புக்களையும் யதார்த்தத்தையும் புரிந்து கொள்ளாமல் இலங்கை தொடர்ச்சியாக மறுப்பதிலும் குற்றச் சாட்டு தெரிவிப்பதிலுமே குறியாக இருக்கின்றது.

இதே போல, தமிழர் தரப்பை பார்க்கின்ற போதும், இலங்கையை எப்படியோ குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும் என்ற குறியில் ஆவேசமாக இருக்கின்றது. கடந்த 12 ஆண்டுகளாக இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த இரு தரப்பின் கயிறு இழப்புகளும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
ஐநா மனித உரிமை பேரவையில் கடந்த ஆண்டுகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. இலங்கை மீது சர்வதேச அழுத்தங்களும் பிரயோகிக்கப்படுகின்றன. என்றாலும் இலங்கையின் அந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாக இல்லை.

பொறுப்பு கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கம் இலங்கை மீதான தீர்மானம் ஒன்றுக்கு அனுசரணையும் வழங்கி இருந்தது. ஆனாலும் எதுவுமே நடந்ததாக இல்லை.
51 வது கூட்டத்தொடர் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. ஏழாம் தேதி முடிவடைகின்றது. இம்முறையும் இலங்கை மீது தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படத்தான் போகின்றது.

இலங்கை மீது இரண்டு புதிய பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன. முதலாவது முன் வைக்கப்பட்ட பிரேரணை பின்பு திருத்தங்களோடு முன்வைக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டன் தலைமையில் அமெரிக்கா,கனடா, ஜெர்மனி, வட மெசிடோனியா, மாலாவி, மொன்ரனேக்கா உட்பட பல நாடுகள் இதற்கு இணை அனுசரணை வழங்கியிருக்கின்றன.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்பு கூறல்,மனித உரிமைகளை மேம்படுத்துதல் ஆகிய தலைப்புகளில் புதிய பிரேரணையை வரையப்பட்டு இருக்கிறது. இந்த 12 ஆண்டுகளிலே இலங்கை இந்த விடயங்களில் தன்னை திருத்திக் கொண்டதாக இல்லை.

இலங்கை மீது முன்வைக்கப்பட்டிருக்கின்ற இந்த இரண்டாவது பிரேரணை தான், பெரும் சர்ச்சையை இப்பொழுது ஏற்படுத்தியிருக்கிறது. ஐநா மனித உரிமைகள் பேரவையிலே முன்வைக்கப்பட்டிருக்கின்ற இந்த இரண்டாவது பிரேரணை வலுவானதாக இல்லை என்று தமிழர் தரப்பு குற்றம் சாட்டுகின்றது.

இவ்வளவு காலமும் தமிழர்களை ஏமாற்றி வருகின்ற இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது தமிழ் கட்சிகளின் ஏகோபித்த முடிவாக இருக்கின்றது. மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நாயகம் பஜ்லெட்டும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையை நிறுத்த வேண்டியதன் அவசியத்தை கடந்த ஆண்டு வலியுறுத்தி இருந்தார்.

என்றாலும்,இப்பொழுது சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்ற இரண்டாவது பிரேரணையில் இது பற்றி எதுவும் கூறப்படவில்லை. ஆகவே, இது இலங்கையை காப்பாற்றுவதற்கான பிரேரணை என்று தமிழ் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இலங்கைக்கு எதிரான இந்தப்பிரேர ணை நிறைவேற்றப்படும் என்பதில் மாற்று கருத்து இல்லை. கூடுதலான வாக்குகள் இதற்கு கிடைக்கும் என்றும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்தப் பிரேரணை நிறைவேற்றப்படுவதை தடுப்பதற்காக இலங்கை கடந்த ஆண்டுகளைப் போலவே ஆதரவு திரட்டும் முயற்சியில் இறங்கி இருக்கின்றது. இதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளோடு இலங்கை தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றது.

இலங்கை வெற்றி பெறுமா? தோல்வி அடையுமா? என்பது அல்ல இங்கே உள்ள பேசு பொருள். 47 நாடுகள் அங்கம் வகிக்கின்ற ஐ. நா மனித உரிமை பேரவையால் எடுக்கப்படுகின்ற தீர்மானத்தை இலங்கை நடைமுறைப்படுத்துமா என்பது தான் இங்கே உள்ள பிரச்சினை.

ஐநா மனித உரிமைகள் பேரவையிலே முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்மானம், இலங்கை மீது ஐ.நா காட்டுகின்ற தளர்வு போக்கு ஆகிய விடயங்கள் தமிழ் கட்சிகளை அதிருப்தி அடையச் செய்திருக்கின்றன என்று தான் கூற வேண்டும். இது தொடர்பில் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் ஐநா மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் நாயகத்திற்கு அவசர அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்கள்.

ஜெனீவாவுக்கு அதிருப்திக் கடிதம்!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக இம்முறை நிறைவேற்றப்படவுள்ள பிரேரணையின் நகல் தொடர்பில் அதிருப்தி தெரிவித்து இலங்கை விடயத்தைக் கையாளும் பிரதான நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்களுக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் வதிவிடப் பிரதிநிதிகளுக்கும் ஆறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் ஒப்பமிட்டுக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களான மாவை. சேனாதிராஜா(இலங்கைத் தமிழரசுக் கட்சி), சி.வி.விக்னேஸ்வரன் (தமிழ் மக்கள் கூட்டணி), செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ), தர்மலிங்கம் சித்தர்த்தன்(புளொட்), சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஈ.பி.ஆர்.எல்.எவ்.), ந. சிறீகாந்தா (தமிழ்த் தேசியக் கட்சி) ஆகியோரே ஒன்றிணைந்து ஒப்பமிட்டு இக்கடிதத்தை அனுப்பி வைத்துள்ளனர.

இலங்கை விடயத்தில் பாதிக்கப்பட்ட தமிழ்த் தரப்பினரின் கோரிக்கைகள் முக்கியமாக பிரேரணையில் உள்வாங்கப்பட வேண்டும் என்று அக்கடிதத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் ஐ,நா. மனித உரிமைகள் பேரவையின் பிரதான அங்கத்துவ நாடுகளிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர் என மேற்படி ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒருங்கிணைப்பாளர் குருசாமி சுரேந்திரன் ஜெனிவாவிலிருந்து கூறுகிறார்.

அந்தக் கடிதத்தின் சாராம்சம் வருமாறு:– “பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பிலிருந்து கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை தங்களுக்கு ஏற்கனவே நாங்கள் அனுப்பி வைத்திருந்த போதிலும் வெளிவந்திருக்கும் மாதிரிப் பிரேரணையில் எம்மால் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கையும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் பரிந்துரைத்ததுமான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக் குற்றவாளிகளைப் பாரப்படுத்த வேண்டும் என்ற விடயம் உதாசீனம் செய்யப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகின்றோம்.

அழிவுகளுக்கான அனுபவத்தைக் கொண்டவர்கள் நாம். சர்வதேச சமூகத்தின் செயலற்ற நிலையினால் நாம் பாரிய விலை கொடுத்துள்ளோம். பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளனர.

இந்தநிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்ளும் முகமாக ஐ,நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படும் பிரேரணையில் நமது கோரிக்கைகள் உள்ளடக்கப்படாமல் இருப்பதை அவதானிக்கின்றோம். இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பினர் கோரிக்கைகளை மாத்திரமல்லாமல் ஐ.நா. உயர் அதிகாரிகளின் பரிந்துரைகளையும் உதாசீனம் செய்து சமர்ப்பிக்கப்பட இருக்கும் பிரேரணையில், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்துக்குக் குற்றவாளிகளைப் பாரப்படுத்தும் எமது பிரதான கோரிக்கையை உள்ளடக்குமாறு மீண்டும் வலியுறுத்துகின்றோம்” – என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையை பார்க்கின்ற போது, இலங்கைக்கு பாரிய அழுத்தம் கொடுக்காத ஒரு பிரேரணை நிறைவேற்றப்பட போகின்றது என்பது தெளிவாகின்றது. என்னதான் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும், இலங்கையில் உள்ள பிரச்சனைக்கு உள்நாட்டிலேயே தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஐக்கிய நாடுகள் சபையில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இதற்காக சகலரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் அவர் சர்வதேசத்திற்கு விடுத்துள்ளார்.

கடந்த 12 ஆண்டுகளாக உள்நாட்டு பரிந்துரைக்கு தீர்வை காண முயற்சி செய்யாத இந்த அரசாங்கம், உலகப் பொறிமுறை என்று கூறி உலகத்தை ஏமாற்றி வருவதாக தமிழ் கட்சிகள் பகிரங்கமாகவே குற்றம் சாட்டுகின்றன.

எனவே, சர்வதேசத்தை முழுமையாக நம்பி இருக்கின்ற இந்த தமிழ் கட்சிகள் இனிமேலாவது மாற்று வழிகளை பற்றி சிந்திக்க வேண்டும். அதற்கான படிப்பினை இப்போது பிறந்து இருக்கிறது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments