Tuesday, 27 September, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுPolitical Opinion : மஹிந்த மண்டியிட்டு சொல்ல வேண்டும்

Political Opinion : மஹிந்த மண்டியிட்டு சொல்ல வேண்டும்

பிரதமர் பதவியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ இப்போது மௌனம் கலைக்க தொடங்கியுள்ளார். தன் எழுச்சிப் போராட்டத்தின் போது ஓடி ஒழித்தவர்; மௌனம் காத்தவர் மஹிந்த ராஜபக்ஷ.

மொட்டு கட்சியினரும் அதன் தலைவர்களும் அச்சத்துடன் மௌனம் காத்து வந்ததோடு தலைமறைவாகவே இருந்தனர்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானதின் பின்னர் கொஞ்சம் வாலை கிளப்ப தொடங்கி விட்டார்கள்.

ராஜபக்ஷ குடும்பத்தினரும் மொட்டு கட்சியின் முக்கியஸ்தர்களும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டும் கருத்துக்களை கூறத் தொடங்கி விட்டனர்.

69 இலட்சம் வாக்குகளை அள்ளிக் குவித்து அரியாசனம் ஏற்றிய மக்களே, அடித்து துரத்தும் அளவுக்கு நிலைமை மோசம் அடைந்திருந்தது.

சிங்கள மக்களின் தன்னிகரில்லா தலைவராகவும் வெற்றி நாயகனாகவும் திகழ்ந்த மஹிந்த ராஜபக்ஷ , நாட்டின் கொடுங்கோலனாக அடையாளம் காணப்பட்டு பதவி துறந்தார். உச்ச பொறுப்புகளையும் பதவிகளையும் இழந்த மஹிந்த ராஜபக்ஷ,பாராளுமன்ற உறுப்புரிமையை மட்டும் வைத்துக் கொண்டிருக்கிறார்.

வாய்ச்சவாடல்களையும், பசப்பு வார்த்தைகளையும், இனவாதத்தையும் பரப்பி,இவ்வளவு காலமும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டிருந்த,மஹிந்த ராஜபக்ஷ , வாய் கூசாமல் வார்த்தைகளை கூறக் கூடியவர் என்பதை இன்னும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

பதவியிலிருந்து விலகியதன் பின்பு முதன்முறையாக, ஆங்கில ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர், “நெருக்கடி நிலையை கையாளக்கூடிய சிறந்த தலைவர் ரணில் விக்கிரமசிங்க ” என பாராட்டி இருக்கிறார். இதனை ஒரு மனம் திறந்த பாராட்டாக பார்க்க முடியவில்லை.

நல்லாட்சி என கூறி நாட்டை நாசமாக்கியவர் ரணில் விக்ரமசிங்க என நாடு முழுவதும் ரணிலுக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர் மஹிந்த ராஜபக்ஷ. மத்திய வங்கியை சூறையாடியவர் ரணில் என எதிர்ப்பு தெரிவித்து,பல வழக்குகளை தாக்கல் செய்ததன் பின்னணியில் இருந்தது என்பதுதான் உண்மை.

வெளிப்படையாக பார்த்தால், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலில் படுதோல்வி அடைவதற்கு மஹிந்த ராஜபக்ஷ,கோட்டாபய ராஜபக்ஷ,பசில் ஆகிய மூவருமே காரணம்.

இந்த நிலையில், ரணில் சிறந்த தலைவர் என மஹிந்த கூறுவதன் மூலம் தன்னுடைய இருப்பை தக்க வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார் என்பது புலனாகின்றது.
நாட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலைக்கு கோட்டா மாத்திரம் பொறுப்பல்ல, தானும் பொறுப்பு என்கிறார் மஹிந்த. அதே நேரம், முன்னைய அரசாங்கமும் இதற்கு பொறுப்பு கூற வேண்டும் என்கிறார். முன்னைய அரசாங்கம் என்று கூறுவதே ரணில் விக்கிரமசிங்க தலைமையில் செயல்பட்ட நல்லாட்சி அரசாங்கமே ஆகும்.

ரணிலை சிறந்த தலைவர் என்று கூறும் மஹிந்த ராஜபக்ஷ, ரணிலின் ஆட்சியையும் விமர்சிக்கிறார். மஹிந்தவின் முன்னுக்குப் பின்னான முரண்பாடும் தம்பியை பாதுகாக்கும் குடும்ப பாசமும் இதில் தெட்டத் தெளிவாகிறது.
“தம்பி கோட்டா ஓர் அரசியல்வாதி அல்ல. சிறந்த நிர்வாகி. அவருடைய ஆலோசகர்களை நம்பியதனால் நிலைமை தலைகீழாகியது”.என்று தனது பாசத்தை பொழியும் மஹிந்த, நாடு சீரழிந்ததற்கான முழு பொறுப்பையும் அவரே ஏற்க வேண்டும் .

கோட்டா ஓர் அரசியல்வாதி அல்ல எனக் கூறும் அவர், முன்னாள் ஜனாதிபதி முன்னாள் பிரதமர் என்ற வகையில், நாட்டுக்கு வழிகாட்டியாக இருந்திருக்க வேண்டும். அல்லது ஜனாதிபதி கோட்டா, நாட்டை தவறாக வழிநடத்துகிறார் என்பதை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தி இருக்க வேண்டும்.

ராஜபக்ஷ குடும்பத்தையும் தம்பியையும் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்ட மஹிந்த, நாடு சீரழிந்த பின்பு இப்போது நீலிக் கண்ணீர் வடிப்பது, இருப்பை பாதுகாக்கும், தப்பி பிழைக்கும் அரசியலாகும்.

இந்த நாடு குடும்ப அரசியலுக்குள் சிக்கியதுக்கு மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை தான் காரணம். அப்பாவி சிங்கள மக்களை தவறாக வழி நடத்தியவர் என்ற தார்மீக பொறுப்பை அவர் ஏற்றே ஆக வேண்டும்.

யுத்த வெற்றி நாயகன் என்ற மமதையோடு தலைமைத்துவ கவர்ச்சியை காட்டித்தான் மக்களை தன் வசப்படுத்தியவர்.

உண்மையும் யதார்த்தமும் மக்கள் புரிந்ததனால் இப்போதும் மன்னிப்பு கூறாமல் மழுப்பல் கதைகளை கூறுகிறார்.

யுத்த வெற்றியை, விமான நிலையத்தில் மண்டியிட்டுச் சொன்னவர். நாட்டை தோல்வி அடையச் செய்த தலைவர் என்பதையும் மண்டியிட்டுச் சொல்ல வேண்டும்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular